நேட்டோ படைகள் மற்றும் ராணுவ உட்கட்டமைப்புக்கு சுவீடன் மற்றும் பின்லாந்து அனுமதி வழங்கினால் கடும் விளைவுகளை சந்திக்க நேரிடும் என ரஷ்ய அதிபர் புதின் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
நேட்டோ உறுப்பினர் நாடுகளாக சுவீடன் மற்றும் பின்லாந்து நாடுகள் இணைவதற்கு துருக்கி தரப்பில் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. இந்நிலையில், மேட்ரிட் நகரில் நடந்த அந்நாட்டு தலைவர்களுடனான கூட்டத்தில், நேட்டோவில் இவ்விரு நாடுகளும் இணைவதற்கான ஆலோசனைகள் மேற்கொள்ளப்பட்டன. இதில் தொடர்புடைய நாடுகளின் தலைவர்கள் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். இதனைத் தொடர்ந்து, துருக்கி தனது எதிர்ப்பு நிலைப்பாட்டை கைவிட்டது. இதனை துருக்கியின் அதிபர் டயீப் எர்டோகன் உறுதிப்படுத்தி உள்ளார். இதனால், நேட்டோ உறுப்பினர்களாக சுவீடன் மற்றும் பின்லாந்து ஆகிய இரு நாடுகள் இணைவதில் இருந்த துருக்கியின் எதிர்ப்பு விலகியது. இதற்கான முத்தரப்பு நாடுகளுடனான கையெழுத்து ஒன்றும் ஒப்பந்தம் ஆனது. இதனை முன்னிட்டு அமெரிக்க அதிபர் ஜோ பைடன் துருக்கிக்கு தனது பாராட்டுகளை தெரிவித்து கொண்டார்.
இந்நிலையில் பைடன் வெளியிட்டு உள்ள டுவிட்டர் செய்தியில், சுவீடன் மற்றும் பின்லாந்து ஆகிய இரு நாடுகளும் தகுதி வாய்ந்த ராணுவங்களை கொண்ட வலிமையான ஜனநாயக நாடுகள். அவர்கள் நேட்டோவின் உறுப்பினராவது அதன் கூட்டு பாதுகாப்புக்கு வலிமை சேர்க்கும். இதற்காக சுவீடன், பின்லாந்து மற்றும் துருக்கி ஆகிய நாடுகள் மேற்கொண்ட முத்தரப்பு ஒப்பந்தத்திற்கு வாழ்த்துகள் என தெரிவித்து உள்ளார்.
இதற்கு பதிலளிக்கும் வகையில் ரஷ்ய அதிபர் புதின் துர்க்மெனிஸ்தானில் நடந்த செய்தியாளர்கள் சந்திப்பில் கூறியதாவது:-
நேட்டோவில் சுவீடன் மற்றும் பின்லாந்து ஆகிய நாடுகள் இணைவது பற்றி ரஷ்யா கவலை கொள்ளவில்லை. அவர்கள் சேர விரும்பினால் சேர்ந்து கொள்ளட்டும். ஆனால், ஒன்றை தெளிவாகவும், சரியாகவும் புரிந்து கொள்ள வேண்டும். இதற்கு முன்வரை அந்த பகுதிகளில் இருந்து அச்சுறுத்தல் எதுவும் இல்லை. ஒருவேளை, அந்த பகுதிகளில் ராணுவ படைகள் குவிக்கப்பட்டாலோ அல்லது ராணுவ உட்கட்டமைப்புகள் ஏற்படுத்தப்பட்டாலோ, எங்களுக்கு எதிராக அச்சுறுத்தல் விடப்பட்டால், அதற்கு எங்கள் தரப்பில் இருந்து பதிலடி தரப்படும். அதே அளவிலான அச்சுறுத்தல் அந்த பகுதியில் ஏற்படுத்தப்படும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.