தஞ்சை சரஸ்வதி மகால் நூலகத்தில் இருந்து காணாமல் போன தமிழில் முதலில் மொழிபெயர்க்கப்பட்ட புதிய ஏற்பாடு பைபிள் லண்டனில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
தஞ்சை மியூசியத்தில் இருந்து 2005ல் காணாமல் போன 300 வருட பழமையான புராதன பைபிளை சிலை கடத்தல் தடுப்பு பிரிவு அதிகாரிகள் கண்டுபிடித்தனர். தஞ்சை மன்னராக இருந்த சரபோஜி மன்னரின் கையெழுத்திட்ட பைபிள் 2005ல் காணாமல் போனதாக புகார் அளிக்கப்பட்டது. 2017ல் வழக்கறிஞர் யானை ராஜேந்திரன் அளித்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொள்ளப்பட்டது.
இந்நிலையில், உலகம் முழுவதும் புராதன பொருட்கள் இருக்கும் இணையதளங்களை ஆய்வு மேற்கொண்டதில் லண்டனில் பைபிள் கண்டுபிடிக்கப்பட்டது. தொடர்ந்து லண்டனில் உள்ள பைபிளை, யுனெஸ்கோ ஒப்பந்தத்தின் மூலம் தமிழகத்திற்கு கொண்டு வர சிலை கடத்தல் தடுப்பு பிரிவு அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர். தஞ்சை சரஸ்வதி மகால் நூலகத்திலிருந்து பைபிளை திருடிச் சென்றது யார் என்பது குறித்தும் விசாரணை நடைபெற்று வருகிறது.
17ம் நூற்றாண்டை சேர்ந்த சீகன்பால்க் நாகையில் புதிய ஏற்பாடு பைபிளை முதன்முறையாக மொழி பெயர்த்தார் என்பது நினைவுகூரத்தக்கது.