கருக்கலைப்புக்கு சட்டப்பூர்வ அங்கீகாரம் கோரி ஆஸ்திரேலியாவில் பிரமாண்ட பேரணி நடத்தப்பட்டது.
அமெரிக்காவில், ‘கருக்கலைப்பு செய்வது சட்ட விரோதம் அல்ல’ என, 1973ல் தீர்ப்பு வழங்கப்பட்டது. இதை கடந்த வாரம் ரத்து செய்த உச்ச நீதிமன்றம், ‘கருக்கலைப்புக்கு தடை விதித்து மாகாண அரசுகள் சட்டம் இயற்றலாம்’ என, தீர்ப்பளித்தது. ‘இது அமெரிக்க பெண்களின் அடிப்படை உரிமையை பறிக்கும் செயல்’ என, ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த பல்வேறு அமைப்புகள் கண்டனம் தெரிவித்துள்ளன. ஆஸ்திரேலியாவிலும் கருக்கலைப்பை அங்கீகரிக்க கோரி பலத்த குரல் எழுந்துள்ளது. இதைத் தொடர்ந்து அமெரிக்க பெண்களின் கருக்கலைப்பு உரிமைக்கு ஆதரவாகவும், அமெரிக்க உச்ச நீதிமன்ற தீர்ப்பை எதிர்த்தும் ஆஸ்திரேலியாவில் பிரமாண்ட பேரணி நடத்தப்பட்டது. மெல்போர்ன் நகரில் நடந்த இந்த பேரணியில், 15 ஆயிரத்திற்கும் அதிகமானோர் பெண் உரிமை வாசகங்களுடன் கூடிய பதாகைகளை ஏந்தி கோஷமிட்டனர்.
ஆஸ்திரேலியாவில், அந்தந்த மாகாண அரசுகள் கருக்கலைப்பை தடை செய்ய அனுமதிக்கப்பட்டு உள்ளது. தெற்கு ஆஸ்திரேலியாவில் தனியார் மருத்துவமனைகள் கருக்கலைப்பு செய்ய அனுமதி கிடையாது. இதுவரை, நியு சவுத் வேல்ஸ் மாகாணம் மட்டுமே கருக்கலைப்புக்கு சட்டப்பூர்வ அங்கீகாரம் வழங்கியுள்ளது. இதர மாகாணங்களிலும் கருக்கலைப்பை சட்டப்பூர்வமாக அங்கீகரிக்கக் கோரி போராட்டம் நடக்கிறது.