பெலாரஸ் நாட்டின் மீது உக்ரைன் ஏவுகணைகளை வீசியதாக குற்றச்சாட்டு!

உக்ரைன் தங்கள் நாட்டின் மீது ஏவுகணை தாக்குதல் நடத்தியதாக பெலாரஸ் அதிபர் அலெக்சாண்டர் லுகாஷென்கோ குற்றச்சாட்டியுள்ளார்.

உக்ரைன் மீது ரஷ்யா தொடுத்துள்ள போர் 5-வது மாதமாக நீடிக்கிறது. கிழக்கு உக்ரைனின் லுஹான்ஸ்க், டொனெட்ஸ்க் பகுதிகளைக் கொண்டுள்ள டான்பாஸ் பிராந்தியத்தை முழுவதுமாக கைப்பற்றுவதில் ரஷ்ய படைகள் தீவிரம் காட்டி வருகின்றன. தற்போது கிழக்கு உக்ரைனின் லுஹான்ஸ்க் மாகாணத்தில் உள்ள லிசிசான்ஸ்க் நகரத்தை கைப்பற்றும் முயற்சியில், அந்த நகரத்தையும் அதன் சுற்றுப்புறங்களையும் தாக்கி வருகின்றன. இந்த தகவலை லுகான்ஸ்க் கவர்னர் செர்கிய் ஹைடாய் தெரிவித்துள்ளார். கடந்த 24 மணி நேரமாக அனைத்து விதமான ஆயுதங்களையும் பயன்படுத்தி ரஷ்ய படைகள் தாக்குதல் நடத்தி வருவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இந்நிலையில், உக்ரைன் தங்கள் நாட்டின் மீது ஏவுகணை தாக்குதல் நடத்தியதாக பெலாரஸ் அதிபர் அலெக்சாண்டர் லுகாஷென்கோ குற்றச்சாட்டியுள்ளார். உக்ரைனின் ஏவுகணை தாக்குதலை பெலாரஸ் ராணுவம் வான்பாதுகாப்பு அமைப்பு மூலம் நடுவானில் இடைமறித்து அழித்ததாக அதிபர் அலெக்சாண்டர் கூறியுள்ளார். உக்ரைனின் அண்டை நாடான பெலாரஸ் போரில் ரஷ்யாவுக்கு ஆதரவான நிலைப்பாட்டை எடுத்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.