அமெரிக்காவில் சுதந்திர தின அணிவகுப்பில் துப்பாக்கிச்சூடு: இளைஞர் கைது!

அமெரிக்காவில் சுதந்திர தின அணிவகுப்பில் துப்பாக்கிச் சூடு நடத்திய மர்ம நபரை போலீசார் கைது செய்தனர்.

அமெரிக்காவின் 246வது சுதந்திர தினம் நேற்று கொண்டாடப்பட்டது. சுதந்திர தினத்தையொட்டி அந்நாட்டில் பல்வேறு மாகாணங்களில் சுதந்திர தின அணிவகுப்புகள், கலைநிகழ்ச்சிகள் நடைபெற்றன. இந்நிலையில், அந்நாட்டின் இல்லினாய்ஸ் மாகாணத்தின் சிகோகோ நகரின் புறநகர் பகுதியில் உள்ள ஹைலண்ட் பூங்காவில் சுதந்திர தின அணிவகுப்பு, அந்நாட்டு நேரப்படி காலை 10 மணிக்கு தொடங்கியது. அப்போது, சுதந்திர தின அணிவகுப்பில் கலந்து கொண்டிருந்த நபர், தான் வைத்திருந்த துப்பாக்கியை கொண்டு அங்கிருந்தவர்கள் மீது சரமாரியாக தாக்குதல் நடத்தினார். துப்பாக்கிக் குண்டுகள் சத்தத்தை கேட்ட பொது மக்கள் அலறியடித்துக் கொண்டு ஓடினர். இந்த துப்பாக்கிச் சூட்டில் 6 பேர் உயிரிழந்தனர். மேலும், 24 பேர் படுகாயம் அடைந்தனர். இந்த துப்பாக்கிச் சூடு சம்பவம் குறித்து தகவலறிந்த போலீசார் மற்றும் மீட்புக் குழுவினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று படுகாயம் அடைந்தவர்களை மீட்டு அருகில் உள்ள மருத்துவமனையில் சேர்த்தனர்.

இதற்கிடையே, இந்த துப்பாக்கிச் சூட்டை நடத்திய ராபர்ட் இ கிரிமோ என்ற 22 வயது நபரை கைது செய்த போலீசார், அவரை காவலில் எடுத்து விசாரித்து வருகின்றனர். கடந்த சில நாட்களுக்கு முன்பு, அமெரிக்காவில் துப்பாக்கி கட்டுப்பாடு சட்டம் அமலுக்கு வந்தது குறிப்பிடத்தக்கது.