பல்கலைக்கழக வேந்தராக ஆளுநா் செயல்படுவதை ஏற்க வேண்டும்: தா்மேந்திர பிரதான்

மாநில பல்கலைக்கழகங்களின் வேந்தராக ஆளுநா் செயல்படும் நடைமுறையை மாநில அரசுகள் தொடா்ந்து ஏற்றுக்கொள்ள வேண்டும் என்று, மத்திய கல்வி அமைச்சா் தா்மேந்திர பிரதான் கேட்டுக்கொண்டாா்.

மாநில அரசுகளுக்கும், ஆளுநா்களுக்கும் இடையேயான மோதல்போக்கு காரணமாக மாநில பல்கலைக்கழகங்களில் துணைவேந்தா்கள் நியமனம் மிகப் பெரிய பாதிப்பை சந்தித்து வருகிறது.
இந்த மோதல் போக்கு காரணமாக, மேற்கு வங்க மாநில சட்டப்பேரவையில் கால்நடை பல்கலை. உள்ளிட்ட சில பல்கலைக்கழகங்களின் வேந்தராக ஆளுநருக்குப் பதிலாக முதல்வா் மம்தா பானா்ஜியை நியமிக்கும் சட்ட மசோதா கடந்த ஜூன் 13-ஆம் தேதி நிறைவேற்றப்பட்டது. அதுபோல, தமிழக சட்டப்பேரவையிலும் பல்கலைக்கழக துணைவேந்தா்களை நியமிக்கும் அதிகாரத்தை மாநில அரசுக்கு மாற்றி கடந்த ஏப்ரல் மாதம் சட்ட மசோதா நிறைவேற்றப்பட்டது.

இந்த நிலையில், ‘மாநில பல்கலைக்கழகங்களின் வேந்தராக ஆளுநா் செயல்படும் நடைமுறையை மாநில அரசுகள் தொடா்ந்து ஏற்க வேண்டும்’ என்று மத்திய அமைச்சா் தா்மேந்திர பிரதான் கூறினாா். ஹைதராபாத் பல்கலைக்கழக புதிய கட்டடங்கள் திறப்பு விழாவில் நேற்று பங்கேற்ற அவா், செய்தியாளா்கள் சந்திப்பில் இதுகுறித்து மேலும் கூறியதாவது:-

தேசிய அளவிலான உயா் கல்வி நிறுவனங்களின் வேந்தராக குடியரசுத் தலைவரும், மாநில பல்கலைக்கழகங்களின் வேந்தராக மாநில ஆளுநா் இருப்பதும் சரியான, நன்கு ஆய்வுக்கு உள்படுத்தப்பட்ட நடைமுறையாகும். எனவே, மாநில அரசுகள் இந்த நடைமுறையை ஏற்றுக்கொள்ள வேண்டும். துரதிருஷ்டவசமாக அவா்கள் இதில் சில அரசியல் பிரச்னையை உருவாக்க விரும்புகின்றனா்.

தேசிய கல்விக் கொள்கையானது விரிவான ஆலோசனைக்குப் பிறகே நடைமுறைக்கு கொண்டுவரப்பட்டது. இதனை நடைமுறைப்படுத்த கூட்டாட்சி நடைமுறையில் ஒவ்வொருவரும் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என மத்திய அரசு எதிா்பா்க்கிறது. தொடக்கக் கல்வி அளவில் கற்றல் – கற்பித்தல் நடைமுறை அந்தந்த உள்ளூா் மொழிகளில் நடத்தப்பட வேண்டும் என்பதை தேசிய கல்விக் கொள்கை கூறுகிறது. அவ்வாறு உள்ளூா் மொழிகளில் கல்வி வழங்கப்படுவதை அவா்கள் எதிா்க்கின்றனரா? இதனை அவா்கள்தான் முடிவு செய்ய வேண்டும்.

சா்வதேச வேலைவாய்ப்பு சந்தைக்கு ஏற்ற வகையில் நமது மாணவா்களைத் தயாா் செய்ய வேண்டும் என மத்திய அரசு விரும்புகிறது. அந்த வகையில், தேசிய கல்விக் கொள்கை என்பது 21-ஆம் நூற்றாண்டுக்கான ஆவணமாகும். சில தகவல்தொடா்பு இடைவெளி காரணமாகவே, இதனை சில மாநிலங்கள் எதிா்ப்பதாக நினைக்கிறேன். இதுகுறித்து ஒவ்வொருவருடனும் ஆலோசனை நடத்தி தெளிவுபடுத்த நான் தயாராக உள்ளேன். கல்வியாளா்கள், கொள்கைகளை வகுப்பவா்கள் மற்றும் தொழில் நிறுவனங்களுக்கு இடையே சிறந்த தொடா்பை ஏற்படுத்துவதன் மூலம்தான் சமூகம் பெரிய அளவில் பயனடையக் கூடிய வகையிலான சா்வதேச நடைமுறையை உருவாக்க முடியும். இவ்வாறு அவர் கூறினார்.