காளி தேவியை மதுவை ஏற்றுக்கொள்ளும் தெய்வமாக கற்பனை செய்வதற்கு எனக்கு முழு உரிமையும் இருக்கிறது என்று பேசிய மஹுவா மொய்த்ரா எம்.பி.க்கு அவரது சொந்த கட்சியான திரிணாமுல் காங்கிரஸ் கண்டனம் தெரிவித்தது.
ஆவணப்பட இயக்குனர் லீனா மணிமேகலை வெளியிட்ட ‘காளி’ என்ற ஆவணப்படத்தின் போஸ்டர் கடும் சர்ச்சையை ஏற்படுத்தியது. அந்த போஸ்டரில் இந்து கடவுளான காளி வேடமணிந்த பெண் ஒருவர் வாயில் சிகரெட் வைத்துக்கொண்டு, கையில் ஓரினச் சேர்க்கையாளர்களின் கொடியைப் பிடித்திருப்பதாக இருந்தது. இதற்கு, பல்வேறு இந்து அமைப்பினர் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். லீனா மணிமேகலையைக் கைதுசெய்ய வேண்டும் என்றும் வலியுறுத்தி வருகின்றனர். அவருக்கு எதிராக வழக்கும் பதிவு செய்யப்பட்டுள்ளது.
இந்த பரபரப்பான சூழ்நிலையில், திரிணாமுல் காங்கிரஸ் எம்.பி. மஹுவா மொய்த்ரா கூறிய கருத்து, பிரச்சனையை மேலும் தீவிரமாக்கி உள்ளது. கொல்கத்தாவில் நடந்த ஒரு நிகழ்ச்சியில் மஹுவா மொய்த்ரா பேசியதாவது:-
காளி தேவியை இறைச்சி உண்ணும் மற்றும் மதுவை ஏற்றுக்கொள்ளும் தெய்வமாக கற்பனை செய்வதற்கு எனக்கு முழு உரிமையும் இருக்கிறது. ஏனெனில் ஒவ்வொரு நபரும் தங்கள் சொந்த வழியில் கடவுளை வழிபட உரிமை உண்டு. உதாரணமாக, நீங்கள் சிக்கிம் சென்றால் அங்கே கடவுளுக்கு மதுவைப் பிரசாதமாக படைக்கிறார்கள். உத்தரப்பிரதேசத்துக்குச் சென்று, அங்கு மதுவை படைத்தீர்கள் என்றால், அவர்கள் அதை தெய்வநிந்தனை என்று கூறுவார்கள.
என்னைப் பொறுத்தவரை, காளி தேவி இறைச்சி உண்ணும் மற்றும் மதுவை ஏற்றுக்கொள்ளும் தெய்வம். நீங்கள் தாராபித் (மேற்கு வங்காளத்தின் பிர்பூம் மாவட்டத்தில் உள்ள ஒரு பெரிய சக்தி பீடம்) சென்றால், சாதுக்கள் புகைபிடிப்பதைக் காணலாம். அதுதான் அங்கு வழிபடும் முறை. நான் காளியை வழிபடும் இந்துவாக இருப்பதால், காளியை அப்படிக் கற்பனை செய்ய உரிமை உண்டு; அது என் சுதந்திரம். உங்கள் கடவுளை சைவமாக வழிபட உங்களுக்கு எவ்வளவு சுதந்திரம் இருக்கிறதோ, அதே அளவுக்கு எனக்கும் சுதந்திரம் உள்ளது. இவ்வாறு அவர் பேசினார்.
மஹுவா மொய்த்ராவின் இந்த கருத்து கருத்து சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. அவர் லீனா மணிமேகலையின் காளி போஸ்டருக்கு ஆதரிப்பதாக கூறி, பாஜகவினர் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். இந்துக் கடவுள்களை அவமதிப்பது மேற்கு வங்காள ஆளும் கட்சியின் (திரிணாமுல் காங்கிரஸ்) அதிகாரப்பூர்வ நிலைப்பாடா? என்றும் பாஜக கேள்வி எழுப்பியது. இதையடுத்து திரிணாமுல் காங்கிரஸ் உடனடியாக விளக்கம் அளித்ததுடன், மஹுவா மொய்த்ராவுக்கு கண்டனமும் தெரிவித்தது. “மஹுவா மொய்த்ரா கூறிய கருத்து அவரது தனிப்பட்ட கருத்து. அதற்கும் கட்சிக்கும் எந்தத் தொடர்பும் இல்லை” என்று திரிணாமுல் காங்கிரஸ் பதிவிட்டது.
இதற்கிடையே தனது கருத்து குறித்து தெளிவுபடுத்திய மஹுவா மொய்த்ரா, தான் எந்தப் படத்திற்கோ அல்லது போஸ்டருக்கோ ஆதரவளிக்கவில்லை என்றும், புகைபிடிக்கும் வார்த்தையை குறிப்பிடவில்லை என்றும் கூறினார். மத உணர்வுகளை புண்படுத்தியதாக, மேற்கு வங்காளத்தைச் சேர்ந்த பாஜக தலைவர் ஜிதேன் சாட்டர்ஜி, காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளார். அதன் அடிப்படையில் எப்ஐஆர் பதிவு செய்யப்பட்டுள்ளது. இதேபோல் பாஜக ஆளும் மத்திய பிரதேசத்திலும் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. போபால் நகரில் உள்ள டீ விற்பனையாளர் ஒருவர் அளித்த புகாரின் அடிப்படையில் குற்றப்பிரிவு போலீசார் எப்ஐஆர் பதிவு செய்துள்ளனர். இந்திய தண்டனை சட்டம் 295 ஏ (மதஉணர்வுகளை புண்படுத்துதல்)பிரிவின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.