சிதம்பரம் நடராஜர் கோயிலில் சாமி தரிசனம் செய்து கோயில் வளாகத்தில் அமர்ந்த புதுச்சேரி துணைநிலை ஆளுநரிடம் வேறு இடத்தில் சென்று அமரும்படி கூறி தீட்சிதர் அவமதித்தாக கூறப்படுகிறது. ஆனால் இந்த விஷயத்தில் என்னை வேறு இடத்தில் அமர சொன்னது உண்மைதான் ஆனால் அவமதிக்கவில்லை, எந்த பிரச்னையும் இல்லை என்றும் தமிழிசை தெரிவித்துள்ளார்.
கடலூர் மாவட்டம் சிதம்பரம் நடராஜர் கோயிலில் நடைபெறும் பூஜைகளில் மார்கழி மாதம் நடைபெறக்கூடிய ஆருத்ரா தரிசனம், ஆனி மாதத்தில் நடைபெறும் ஆனித் திருமஞ்சனம் ஆகியவை மிகவும் பிரசித்தி பெற்றது. கடந்த ஜூன் 27ஆம் தேதி கொடியேற்றத்தோடு ஆனித் திருமஞ்சனம் தொடங்கியது. இந்நிலையில் ஆனித் திருமஞ்சனம் மஹாபிஷேகம் விழாவில் கலந்து கொள்ள இன்று அதிகாலை புதுச்சேரி துணைநிலை ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் சிதம்பரம் நடராஜர் கோயிலுக்குச் சென்றிருந்தார். சாமி தரிசனம் செய்துமுடித்த பின்னர் தமிழிசை சௌந்தரராஜன் கோயில் வளாகத்தில் அமர்ந்துள்ளார். அப்போது அவரிடத்தில் தீட்சிதர்கள் அங்கே அமரக்கூடாது என்று கூறியதாக தகவல்கள் அதிகமாக பரவின. மேலும் சிதம்பரம் நடராஜர் கோயிலில் புதுச்சேரி துணை நிலை ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் அவமதிக்கப்பட்டார் என்றும் செய்திகள் பரவ தொடங்கியது.
இதனிடையே புதுச்சேரிக்குச் சென்ற அவர் அங்கு அம்மாநில பட்ஜெட் தொடர்பாக ஆலோசனைக் கூட்டத்தில் பங்கேற்றார். அந்த கூட்டம் நிறைவடைந்த பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது தமிழிசை சௌந்தரராஜனிடம், சிதம்பரம் கோயில் வளாகத்தில் உள்ள படியில் அமர்ந்தபோது, அங்கே அமரக்கூடாது என்று தீட்சிதர்கள் கூறி உங்களை அவமதித்ததாக ஒரு தகவல் வெளியாகியுள்ளது என்று பத்திரிகையாளர்கள் கேள்வி எழுப்பியபோது அதற்கு சிரித்தபடி மறுப்பு தெரிவித்தார்.
அது குறித்துப் பேசிய அவர், “என்னை யாரும் அவமதிக்கவில்லை. நான் நேராக சென்று ஒரு இடத்தில் அமர்ந்திருந்த போது ஒருவர் வந்து, அந்த பக்கம் நிறைய இடம் உள்ளது என்றும் அங்கே சென்று அமரும்படியும் கூறினார். அதற்கு நான் இறைவனைப் பார்க்கவந்தேன் இங்கே தான் உட்காருவேன் என்று கூறினேன். அதைக்கேட்டு அவரும் சென்றுவிட்டார். நான் படியில் கூட உட்காரவில்லை. இறைவனை பார்க்க போனேன். அதை யாரோ ஒருவர் வந்து சொன்னார். அதை நான் பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை. மற்ற எல்லா தீட்சிதர்களும் இறைவனுக்கு படைத்த மாலை, பிரசாதம் ஆகியவற்றை என்னிடம் கொடுத்தனர் என்றார்.
சிதம்பரம் கோயில் என்றாலே பிரச்னையைத் தீர்ப்பதற்கு முன்னாள் பிரச்னை வருவதாக கூறிய தமிழிசை ஆனால் தனது விஷயத்தில் எந்த பிரச்னையில்லை என்று கூறினார்.
மேலும் இந்த விவகாரம் தொடர்பாக சிதம்பரம் நடராஜர் கோயில் தீட்சிதர்கள் சார்பில் பேசிய ஐயப்ப தீட்சிதர், “அவர்களை எந்த விதத்திலும் அவமரியாதை படுத்தியோ, அலட்சியப் படுத்தியோ அவர்களை நிராகரிக்கவில்லை. அவர்கள் குறிப்பிட்டுக் கூறும் அந்த இடத்தில் பிரம்மோற்சவம் என்ற தேரோட்டத் திருவிழா இரண்டு நாட்கள் நடக்கிறது என்பதால், சில இடங்கள் உபயம் செய்பவர்களுக்காகவும், கோயில் முக்கிய நிகழ்விற்காகவும் ஒதுக்கப்பட்டுள்ளது. அங்கே இருப்பவர், இல்லாதவர் என்று பாரபட்சமின்றி பரம்பரை பரம்பரையாக உபயம் செய்பவர்கள் இருக்கிறார்கள். ஆகவே அவர்களுக்காக ஒதுக்கப்பட்ட இடம் என்பதால் ஆளுநரிடத்தில் கொஞ்சம் இப்படி அமரும்படி வேண்டுகொள் வைத்தோம். அதையும் அவர் ஏற்றுக்கொண்டு, நின்று சாமி தரிசனம் செய்து சந்தோஷமாகத் தான் சென்றுள்ளார்” என்று கோயில் தரப்பில் ஐயப்ப தீட்சிதர் தெரிவித்துள்ளார்.