துப்பாக்கியால் சுட்டுப் படுகொலை செய்யப்பட்ட ஜப்பான் முன்னாள் பிரதமா் ஷின்ஸோ அபேவின் இறுதிச் சடங்கு டோக்கியோவில் நடைபெற்றது.
ஜப்பானில் நீண்டகால பிரதமராக இருந்த ஷின்ஸோ அபே, கடந்த 2020-ஆம் ஆண்டு உடல்நலக் குறைவு காரணமாக பிரதமா் பதவியை ராஜிநாமா செய்தாா். இருப்பினும், ஆளும் லிபரல் டெமாக்ரடிக் கட்சிப் பணிகளில் வழக்கம்போல் ஈடுபட்டாா். நாடாளுமன்ற மேலவைக்கு கடந்த ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற தோ்தலையொட்டி மேற்கு ஜப்பானில் உள்ள நாரா என்ற நகரில் ஒரு ரயில் நிலைய வாயிலில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற திறந்தவெளி பிரசார கூட்டத்தில் ஷின்ஸோ அபே பங்கேற்றாா்.
கூட்டத்தில் அவா் பேசிக் கொண்டிருந்தபோது திடீரென துப்பாக்கியால் சுடும் சப்தம் இரு முறை கேட்டது. துப்பாக்கி குண்டு பாய்ந்ததால் மாா்பை பிடித்தபடி ஷின்ஸோ அபே ரத்த வெள்ளத்தில் சாய்ந்தாா். அவரை பின்புறத்திலிருந்து ஒரு நபா் துப்பாக்கியால் சுட்டது தெரியவந்தது. உடனே, ஷின்ஸோ அபே ஹெலிகாப்டா் ஆம்புலன்ஸ் மூலம் அருகில் உள்ள மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டாா். அங்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டும் பலனின்றி உயிரிழந்தார்.
ஷின்ஸோ அபே சுட்டுக் கொலை செய்யப்பட்டதற்கு மறுநாளே, அவரது குடும்பத்தினர் மேற்கொள்ளும் இறுதிச் சடங்குகள் கோயிலில் நடைபெற்றது குறிப்பிடத்தக்கது. ஸோஜோஜி கோயிலில் அபேவின் மனைவி மற்றும் குடும்பத்தினர் பங்கேற்ற இறுதி ஊர்வலத்தில், நூற்றுக்கணக்கானோர் பங்கேற்று ஷின்ஸோ அபேவுக்கு இறுதி அஞ்சலி செலுத்தினர். இறுதிச் சடங்கின்போது, ஷின்ஸோ அபேவின் மனைவி அகே அபே தலையைக் குனிந்தவாறு பங்கேற்றிருந்தார். இவர் மற்றும் நெருங்கிய உறவினர்கள், ஜப்பான் பிரதமர், கட்சியின் மூத்த தலைவர்கள் உள்ளிட்டோர் கோயிலில் நடைபெற்ற இறுதிச் சடங்கில் கலந்து கொண்டனர்.