மெக்சிகோவில் இனம் மற்றும் மொழி பாகுபாட்டால் பள்ளி வகுப்பறையில் வைத்து பழங்குடி இனத்தை சேர்ந்த மாணவர் ஒருவரை 2 மாணவர்கள் தீவைத்த கொடூர சம்பவம் நடந்துள்ளது.
மெக்சிகோ நாட்டில் இனபாகுபாடு தொடர்பான பிரச்சனைகள் அடிக்கடி நடந்து வருகிறன்றன. இதனை தடுக்க அந்நாட்டு அரசும் நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. மேலும் மெக்சிகோவில் இனப்பாகுபாட்டை தடுக்க சட்டம் மற்றும் தனி அமைப்புகள் உள்ளன. இருப்பினும் ஆங்காங்கே இனபாகுபாடு தொடர்பான தாக்குதல் நடத்தப்பட்டு வருகின்றன.
2020 மக்கள்தொகை கணக்கெடுப்பின்படி நாட்டின் மொத்த மக்கள் தொகை 126 மில்லியனாக உள்ளது. இதில் 23.2 மில்லியன் மக்கள் பழங்குடியினராக உள்ளனர். 7.3 சதவீதத்துக்கும் அதிகமானவர்கள் பழங்குடி மக்களின் மொழியை பேசுகின்றனர். இந்நிலையில் தான் பழங்குடி மக்களை குறிவைத்து இனம், மொழி பாகுபாடு காட்டப்பட்டு வருகிறது. 2018 ஆம் ஆண்டில் தேசிய புள்ளியியல் நிறுவனம் வெளியிட்ட விபரங்கள் அடிப்படையில் நாட்டில் சுமார் 40 சதவீத பழங்குடியின மக்கள் இனபாகுபாட்டு பிரச்சனையை எதிர்கொள்வதாக குறிப்பிட்டு இருந்தது. இது தற்போதும் தொடர்ந்து வருகிறது. கடந்த மார்ச் மாதம் ஓட்டோமி எனும் பழங்குடி பெண் மெக்சிகோ சிட்டியில் உள்ள ஓட்டலில் கழிவறையை பயன்படுத்த அனுமதி மறுக்கப்பட்டது. இதன் தொடர்ச்சியாக தான் தற்போது ஓட்டோமி பழங்குடி வகுப்பை சேர்ந்த 14 வயது மாணவர் மீது தீவைக்கப்பட்டுள்ள சம்பவம் நடந்துள்ளது.
மெக்சிகோ நாட்டின் மத்திய பகுதியில் குரேடாரோ அமைந்துள்ளது. இங்குள்ள உயர்நிலை பள்ளியில் ஜுவான் ஜமோரானா (வயது 14) படித்து வருகிறார். இவர் ஓட்டோமி எனும் மொழி பேசும் பழங்குடி வகுப்பை சேர்ந்தவர். பள்ளி வகுப்பறையில் இவர் அமரும் இருக்கையில் 2 பேர் மதுபானத்தை ஊற்றி வைத்தனர். இதையறியாத ஜுவான் ஜமோரானா அதில் அமர்ந்தார். இதனால் அவரது ஆடை நனைந்தது. இதையடுத்து அவர் எழுந்த நிலையில் 2 பேர் சேர்ந்து அவர் மீது தீயை கொளுத்தி விட்டனர். இதனால் ஜுவான் ஜமோரானாவின் ஆடையில் பிடித்த தீ வேகமாக அவரது உடலுக்கும் பரவியது. இதனால் வலி தாங்க முடியாமல் அவர் அலறி துடித்து ஓடினார். இதையடுத்து அவரை மற்றவர்கள் மீட்டனர். இருப்பினும் ஜுவான் ஜமோரானா தீக்காயம் அடைந்தார். இதையடுத்து அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்தனர். இந்நிலையில் அவர் தற்போது டிஸ்சார்ஜ் ஆகியுள்ளார்.
முதற்கட்ட விசாரணையில் மொழி, இனம் ரீதியாக ஜுவான் ஜமோரானா புறக்கணிக்கப்பட்டது தெரியவந்தது. ஓட்டோமி பழங்குடி வகுப்பை சேர்ந்த அவரை இதற்கு முன்பும் பல முறை மொழி, இனம் ரீதியாக சிலர் கொடுமைப்படுத்தியது, ஆசிரியர் கூட அவருக்கு எதிராக செயல்பட்டதாகவும் குடும்பத்தினர் குற்றம்சாட்டியுள்னளர்.
முன்னதாக சம்பவம் குறித்து ஜுவான் ஜமோரானாவின் குடும்பத்தினர் பள்ளி நிர்வாகத்தில் புகார் அளித்தும் கூட நடவடிக்கை எடுக்காமல் இருந்ததே இந்த செயலுக்கு காரணமாக இருந்ததாக அவரது வழக்கறிஞர் எர்னெஸ்டோ பிராங்கோ கூறினார். மேலும் மெக்சிகோவில் மொத்தம் 3 லட்சத்து 50 ஆயிரம் மக்கள் தொகை உள்ளது. இங்குள்ள பழங்குடி மக்களில் ஓட்டோமி இனமும் ஒன்றும். மொழி, இனம் ரீதியாக கேலி, துன்புறுத்தலை சந்தித்து வந்ததால் இந்த இனத்தை சேர்ந்த ஜுவான் ஜமோரானா தனது தாய் மொழியான ஓட்டோமியை அதிகமாக பேசாமல் இருந்துள்ளார் எனவும் அவர் கூறினார்.
இதுபற்றி மாணவரின் தந்தை கூறுகையில், ‛‛நாங்கள் அவர்களின் இனம் இல்ல என நினைத்து என் மகன் மீது தீவைக்கப்பட்டுள்ளது. இது கொடூரமான கொலை முயற்சி” எனக்கூறி அழுதார். இதற்கிடையே தான் சம்பவம் குறித்து விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. தேவையெனில் நாட்டின் அட்டர்னி ஜெனரல் அலுவலகம் இந்த வழக்கை முன்னெடுக்கும் என ஜனாதிபதி ஆன்ட்ரெஸ் மானுவல் லோபஸ் ஒப்ராடோர் கூறியுள்ளார். மெக்சிகோவில் இனம் மற்றும் மொழி பாகுபாட்டால் பள்ளி வகுப்பறையில் வைத்து பழங்குடி இனத்தை சேர்ந்த மாணவர் ஒருவரை 2 மாணவர்கள் தீவைத்து எரித்த சம்பவம் கடும் அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது.