ஓபிஎஸ்ஸால் தர்மயுத்தம் சீன் போட முடியல: கோகுல இந்திரா!

இந்த முறை தர்மயுத்தம் என்ற சீனை போட முடியாததால் ஓ.பன்னீர்செல்வம் அராஜகத்தில் ஈடுபட்டுள்ளார் என முன்னாள் அமைச்சர் கோகுல இந்திரா கடுமையாக விமர்சித்துள்ளார்.

அதிமுகவில் ஓபிஎஸ் – ஈபிஎஸ் என இருதரப்பாக பிரிந்து முக்கிய நிர்வாகிகள் செயல்பட்டு வரும் நிலையில், எடப்பாடி பழனிசாமியை இடைக்கால பொதுச் செயலாளராக அதிமுக பொதுக்குழுவில் தேர்வு செய்துள்ளனர். அதிமுக பொதுக்குழுவுக்கு தடை இல்லை என்ற உயர் நீதிமன்ற தீர்ப்பையடுத்து, பொதுக்குழு கூட்டம் ஜூலை 11ஆம் தேதி நடைபெற்றது. அதில், அதிமுகவில் பொதுச் செயலாளர் பதவியை மீண்டும் உருவாக்கும் தீர்மானம் உள்ளிட்ட 16 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. இடைக்கால பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமி தேர்வு செய்யப்பட்டார். இதற்கு எதிராக ஓபிஎஸ் தரப்பினர் அதிமுக தலைமை அலுவலகத்தைக் கைப்பற்றினர். அப்போது இருதரப்பினருக்கும் ஏற்பட்ட மோதலில் அந்தப் பகுதியே ரத்தக்களறியானது. இதையடுத்து வருவாய்த்துறையினர் அதிமுக தலைமை அலுவலகத்திற்கு சீல் வைத்தனர்.

இந்நிலையில், இன்று செய்தியாளர்களைச் சந்தித்த எடப்பாடி பழனிசாமி ஆதரவாளரும் முன்னாள் அமைச்சருமான கோகுல இந்திரா கூறியதாவது:-

அதிமுக தலைமை அலுவலகத்திற்கு சீல் வைக்கப்பட்டுள்ளது ஏற்றுக்கொள்ளவே முடியாத ஒன்று. அராஜகமான செயல். அண்ணன் நத்தம் விஸ்வநாதன் அடிக்கடி சொல்வார். ஓபிஎஸ்ஸுக்கு இன்னொரு முகம் இருக்கிறது. அகோரமான செயல்பாடுகளும் முகமும் இருக்கிறது என்று சொல்வார். ஒன்றுமே தெரியாதது போல பேசுவார், ஆனால் மற்றவர்கள் வாழ்ந்தால் பொறுக்க மாட்டார். அதை நிரூபிக்கக்கூடிய வகையில் இப்போது செயல்பட்டுள்ளார்.

அதிமுக பொதுக்குழு தொடர்பாக 9 மணிக்கு உத்தரவு வரும் நிலையில், நீதிமன்றத்திற்குச் சென்று வாதம் செய்த ஓ.பன்னீர்செல்வம் தரப்பினர், அதிமுக அலுவலகத்திற்கு சென்று அராஜகம் செய்துள்ளனர். நீதிமன்ற உத்தரவு வந்த பிறகுதான் பொதுக்குழு மேடைக்கு வந்தார் எடப்பாடி பழனிசாமி. இதிலிருந்தே யார் நீதியின் பக்கம், நியாயத்தின் பக்கம் இருக்கிறார்கள் என்பது தெரியவரும். அதிமுக தலைமை கழகத்திற்கு ஓ.பன்னீர்செல்வத்துடன் யார் யார் வந்தார்கள் என ஆதாரப்பூர்வமாக என்னால் சொல்ல முடியும். அவரது வண்டியில் தொங்கிக்கொண்டு வந்த ஆள் யாரென்று கூட என்னால் சொல்ல முடியும். சிவகங்கை மாவட்டத்தில் ஆவின் சேர்மனாக, பேரவை செயலாளராக இருக்கும் அசோகன் ஏற்பாட்டில் சிவகங்கை மாவட்டத்திலிருந்து ஆட்களை இறக்கி அராஜகம் செய்துள்ளனர்.

சாதி ரீதியாக இதைக் கொண்டு போக வேண்டுமென்று திட்டமிட்டு பேசி, கல், கடப்பாறைகளோடு அதிமுக தலைமைக் கழகத்திற்கு வந்து அராஜக நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளனர். அதிமுக தொண்டர்கள் கோவிலாக நினைக்கக்கூடிய இடத்தில் கடப்பாறையை வைத்து பூட்டை உடைத்து உள்ளே சென்று அடாவடியாகப் புகுந்துள்ளனர். அடுத்த தெருவிலேயே இருக்கிறது காவல் நிலையம். ஓபிஎஸ் ஒன்றும் ஜூ மந்திரகாளி என மந்திரம் போட்டு அங்கு வந்து இறங்கவில்லை. ஓபிஎஸ் தரப்பினர் கூட்டமாக வரும்போது போலீசார் எங்கு சென்றனர். இதெல்லாம் எதிர்க்கட்சியின் தலைமை அலுவலகத்தை மூடிவிட வேண்டும் என்ற ஆளுங்கட்சியின் சில்லறைத்தனமான ஆசை.

பொதுக்குழு செயற்குழு உறுப்பினர்கள், தொண்டர்கள் எடப்பாடி பழனிசாமி தலைமைப் பொறுப்பேற்க வேண்டும் என விரும்புகிறார்கள். பொதுக்குழுவுக்கு ஓபிஎஸ்ஸுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டிருக்கும் நிலையில் அங்கு வந்து தனது கருத்தைச் சொல்லி இருக்கலாம். ஓபிஎஸ்ஸால் இந்த முறை தர்மயுத்தம் சீனை போட முடியவில்லை என்பதால் இதுமாதிரியான அராஜக செயல்களில் ஈடுபட்டுள்ளார். தொண்டர்கள் மனதில் ஓ.பன்னீர்செல்வம் மீது கொஞ்சமே கொஞ்சமாக இருந்த மரியாதையும் போய்விட்டது. இவரால் கட்சிக்கு ஒரு பிரயோஜனமும் இல்லை, கட்சியை அழிக்க நினைத்தவர் என எல்லோருக்கும் தெரியும்படி தற்போது நடந்துகொண்டுள்ளார். இவ்வாறு கோகுல இந்திரா கூறினார்.