டெல்லி சர்வதேச விமான நிலையத்தில் 45 துப்பாக்கிகளுடன் தம்பதி கைது!

புதுடெல்லியில் உள்ள இந்திரா காந்தி சர்வதேச விமான நிலையத்தில், 45 கைத்துப்பாக்கிகளுடன் வந்த இந்திய தம்பதியை நேற்று சுங்கத்துறை அதிகாரிகள் கைது செய்தனர்.

ஆசிய நாடான வியட்நாமின் ஹோ சி மின் நகரில் இருந்து, 10ம் தேதி புதுடெல்லி விமான நிலையம் வந்த ஒரு தம்பதியின் உடைமைகளை, சுங்கத்துறையினர் சந்தேகத்தின் படி பரிசோதித்தனர். அப்போது அவர்கள் கொண்டுவந்த சூட்கேசில், 45 கைத்துப்பாக்கிகள் பதுக்கி வைக்கப்பட்டிருப்தை பார்த்து அதிர்ச்சியடைந்தனர். இதையடுத்து, அவர்கள் கண்காணிப்பில் வைக்கப்பட்டனர். அவர்கள் ஜக்ஜித் சிங் மற்றும் ஜஸ்விந்தர் கவுர் என்றும், இருவரும் கணவன் – மனைவி என்றும் அடையாளம் காணப்பட்டனர். இந்த வழக்கை விசாரித்து வரும் என்.எஸ்.ஜி., எனப்படும் தேசிய பாதுகாப்புப் படை, ‘துப்பாக்கிகள் முழுமையாக செயல்படக்கூடியவை’ என தன் முதற்கட்ட அறிக்கையில் உறுதிப்படுத்தியுள்ளது. ‘பிரான்சின் பாரிஸ் நகரில் இருந்து வியட்நாமில் தரையிறங்கியதும், ஜக்ஜித் சிங்கிடம் அவரது சகோதரர் மஞ்சித் சிங் என்பவர், இந்த சூட்கேசை கொடுத்துள்ளார்’ என சுங்க அதிகாரிகளின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுஉள்ளது.

கைப்பற்றப்பட்ட துப்பாக்கிகளின் மதிப்பு, 23 லட்சம் ரூபாயாகும். தேசிய பாதுகாப்பு படையினரின் விசாரணைக்குப்பின் கைது செய்யப்பட்ட தம்பதியர், ஏற்கனவே துருக்கியிலிருந்து 25 கைத்துப்பாக்கிகளை இந்தியாவுக்கு கொண்டுவந்ததை ஒப்புக்கொண்டு உள்ளனர்.