போதிய பாதுகாப்பு இல்லாததே முன்னாள் பிரதமர் ஷின்சோ அபே கொல்லப்பட்டதற்கு காரணம் என ஜப்பான் பிரதமர் ஃபுமியோ கிஷிடா தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து ஜப்பான் பிரதமர் ஃபுமியோ கிஷிடா கூறியதாவது:-
அபே நாட்டின் மிகவும் முக்கியமான செல்வாக்கு நிறைந்த தலைவர்களில் ஒருவர். அவர் கடந்த வெள்ளிக்கிழமை சுட்டுக் கொல்லப்பட்டது ஒட்டுமொத்த ஜப்பானையும் அதிர்ச்சியடையச் செய்துள்ளது. குற்றங்கள் மிகக் குறைவாக நடைபெறும் நாடுகளில் ஒன்றான ஜப்பானில் அந்த நாட்டின் முன்னாள் பிரதமர் சுட்டுக் கொல்லப்பட்டிருப்பது ஜப்பானை மட்டுமல்லாது உலக நாடுகளையும் அதிர்ச்சியடையச் செய்துள்ளது.
புகைப்படங்கள் மற்றும் விடியோக்களைப் பார்க்கும்போது குற்றவாளி அபேவுக்கு அருகில் வர முடிந்தது தெளிவாகத் தெரிகிறது. இந்த சம்பவம் குறித்து அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர். எந்த இடத்தில் தவறு நிகழ்ந்தது எனவும் அதனை எவ்வாறு சரி செய்வது என்பதையும் அவர்கள் ஆலோசித்து வருகின்றனர். எந்த இடத்தில் தவறு நிகழ்ந்திருந்தாலும் அதனை உடனடியாக சரி செய்ய வேண்டும். அதேபோல பாதுகாப்பு குறித்த விஷயங்களில் மற்ற நாடுகள் எந்த மாதிரியான பாதுகாப்பு ஏற்பாடுகளை மேற்கொள்கின்றன என்பதையும் கவனிக்க வேண்டும். மறைந்த ஷின்சோ அபேவிற்கு ஜப்பான் அரசு சார்பில் இறுதிச் சடங்கு மரியாதைகள் செய்யப்பட உள்ளன. ஜப்பானின் பாதுகாப்பு குறித்த கொள்கைகளில் அபேயின் பங்களிப்பு அளப்பரியது. இவ்வாறு அவர் கூறினார்.
அபே சுடப்பட்டதும் அவரை சுட்டவராக சந்தேகிக்கப்படும் நபர் உடனடியாக கைது செய்யப்பட்டார். அவரிடம் காவல் துறையினர் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். அவரிடம் மேற்கொண்ட விசாரணையில் ஒரு வதந்தி ஒன்று இருப்பது தெரிய வந்துள்ளது. அபேயினை சுட்டதாக சந்தேகிக்கப்படும் நபருக்கு ஒரு மதம் சம்பந்தமான நிறுவனத்தின் மீது வெறுப்பு இருந்ததாகவும், அந்த மதம் தொடர்பான நிறுவனத்துடன் அபே தொடர்பில் இருந்ததாகவும் கூறப்படுகிறது. அதன் காரணமாகவே அந்த நபர் அபேவினை சுட்டதாகவும் கூறப்படுகிறது.
குற்றவாளி என சந்தேகிக்கப்படும் 41 வயதான யெட்ஷியா யமகாமி சிறிது காலத்திற்கு ஜப்பானின் கடற்படையில் பணியாற்றியதாகக் கூறப்படுகிறது. அவரது தாயார் தேவாலயம் ஒன்றிற்கு அதிக அளவில் நன்கொடை கொடுத்து வந்ததாகவும், அதனால் குடும்பத்தில் பண நெருக்கடி ஏற்பட்டதாகவும் கூறப்படுகிறது. தனது தாயாரின் செயல் யமகாமிக்கு வெறுப்பை ஏற்படுத்தியதாகத் தெரிகிறது. அவர் நன்கொடை அளித்து வந்த தேவாலயத்திற்கும் முன்னாள் பிரதமர் அபேவிற்கும் தொடர்பு இருந்ததாகவும் கூறப்படுகிறது. இருப்பினும், மேற்கூறப்பட்டுள்ளத் தகவலின் உண்மைத் தன்மை குறித்து காவல் துறை சார்பில் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.