மத்திய அரசின் கே.வி., மற்றும் சைனிக் பள்ளிகளில் தமிழ் கற்பிக்க பொன்முடி வேண்டுகோள்!

தமிழகத்தில் செயல்படும், மத்திய அரசின் கே.வி., மற்றும் சைனிக் பள்ளிகளில், ஒன்று முதல் 5ம் வகுப்பு வரையில், தமிழ் பாடம் கட்டாயமாக கற்பிக்க வேண்டும் என, தமிழக உயர்கல்வி துறை அமைச்சர் பொன்முடி வேண்டுகோள் விடுத்துள்ளார்.

சென்னை தலைமை செயலகத்தில், உயர்கல்வி துறை அமைச்சர் பொன்முடி கூறியதாவது:-

கலை, அறிவியல் கல்லுாரிகளில், இரண்டு, மூன்றாம் ஆண்டு மாணவர்களுக்கு, ஜூலை 18ல் வகுப்புகள் துவங்கும். சி.பி.எஸ்.இ.,யின், பிளஸ் 2 தேர்வு முடிவுகள் தாமதமாவதால், மாணவர்களின் உயர்கல்வி கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. எனவே, தேர்வு முடிவை விரைந்து வெளியிட வேண்டும்.

பல்கலைகளின் பட்டமளிப்பு விழாக்களை அரசியல் மேடையாக பயன்படுத்தக்கூடாது என, ஏற்கனவே நாங்கள் கூறியிருக்கிறோம். மதுரை காமராஜ் பல்கலை பட்டமளிப்பு விழாவில், புதிய கல்வி கொள்கை குறித்தும், ஆரிய, திராவிட இன ரீதியாகவும் கவர்னர் பேசியுள்ளார். இனம், மொழி ரீதியாக வேறுபாடு இன்றி, மக்கள் ஒற்றுமையுடன் இருக்க வேண்டும் என்ற எண்ணத்துடன், தமிழகத்தில் ஆட்சி நடக்கிறது. இங்கு எந்தவிதமான மதவெறியும் வந்து விடக்கூடாது என்பதில், முதல்வர் ஸ்டாலின் கவனமாக செயல்படுகிறார்.

தமிழகம் முழுதும் பல்வேறு தரப்பில் கருத்துகள் கேட்கப்பட்டு, மாநில கல்வி கொள்கையின் அம்சங்கள் இறுதி செய்யப்பட உள்ளன. கவர்னரும் தன் கருத்துகளை தெரிவிக்கலாம். நவீன கல்வி முறையும், இரு மொழி கொள்கையும், மாநில கல்வி கொள்கையில் இடம் பெறும். இதை புரிந்து கொண்டு, தமிழக கல்வி கொள்கையை கவர்னர் ஆதரிக்க வேண்டும்.

மதுரை காமராஜ் பல்கலை பட்டமளிப்பு விழாவில், மத்திய இணை அமைச்சர் முருகன் பேசுகையில், “புதிய கல்வி கொள்கையில், தமிழுக்கு முக்கியத்துவம் தரப்பட்டுள்ளது” என்றிருக்கிறார். உண்மையில் புதிய கல்வி கொள்கையில், ஹிந்திக்குதான் அதிக முக்கியத்துவம் தந்துள்ளனர். ‘ஹிந்தி படிப்பவர்களுக்கு கல்வி உதவி அளிப்போம்’ என, அந்த கொள்கையில் தெரிவித்துள்ளனர். தமிழை இவர்கள்தான் வளர்ப்பதாக கூறுவது தவறான கூற்று. மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதி ஆட்சி காலங்களில் மட்டுமே, தமிழ் மொழியில் பாடங்களும், படிப்புகளும் அறிமுகம் ஆகின. இதைத்தான் திராவிட மாடல் என்கிறோம்.

தமிழகத்தில் செயல்படும், கேந்திரிய வித்யாலயா மற்றும் சைனிக் பள்ளிகளில், ஒன்று முதல் 5ம் வகுப்பு வரை, தமிழ் பாடத்தை கட்டாயமாக கற்பிக்க வேண்டும் என, அன்பான வேண்டுகோள் விடுக்கிறேன். இந்த கோரிக்கையை, தமிழகத்தை சேர்ந்த மத்திய இணை அமைச்சரான முருகன் நடைமுறைப்படுத்துவார் என, நம்புகிறேன்.

நீட் மசோதாவை ஜனாதிபதிக்கு அனுப்பியதாக, கவர்னர் அலுவலகம் அனுப்பிய செய்தியைத்தான், தமிழக முதல்வர் சட்டசபையில் அறிவித்தார். மசோதா ஜனாதிபதிக்கு அனுப்பப்பட்டு உள்ளதா என, முதல்வர் விசாரிப்பார். மக்களால் தேர்வு செய்யப்பட்ட பிரதிநிதிகள் இருக்கும் மாநில அமைச்சரவை என்ன முடிவெடுக்கிறதோ, அதை சரியாக செயல்படுத்துகின்றனரா என கண்காணிக்கவே, மத்திய அரசால் கவர்னர் நியமிக்கப்பட்டுள்ளார். மத்திய அரசின் கொள்கைகளை புகுத்த கவர்னரை நியமிக்கவில்லை. எனவே, உண்மையான அரசியல் அமைப்பு சட்டத்தை, கவர்னர்கள் புரிந்து செயல்பட வேண்டும். சட்டசபையில் மக்கள் பிரதிநிதிகள் மேற்கொள்ளும் முடிவுகளை, மாநில கவர்னர்கள் செயல்படுத்த வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.