மெக்சிகோ நாட்டில் ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கி 14 கடற்படை வீரர்கள் உயிரிழந்து உள்ளனர்.
மெக்சிகோ நாட்டு கடற்படையின் தி பிளாக் ஹாக் ஹெலிகாப்டர், குவாடலஜாரா என்ற போதை பொருள் கடத்தல் கும்பலின் தலைவரான ரபேல் கரோ குயின்டெரோவை கைது செய்து அழைத்துச் சென்ற மற்றொரு விமானத்திற்கு பாதுகாப்பிற்காக உடன் சென்றது. அவர் சினலோவா என்ற வடக்கு மாநிலத்தில் வைத்து கைது செய்யப்பட்டார். இந்நிலையில், கடற்படை ஹெலிகாப்டர் திடீரென விபத்தில் சிக்கியது. இந்த விபத்தில், அதில் பயணம் செய்த 14 கடற்படை வீரர்களும் உயிரிழந்தனர். ஒருவர் மட்டும் உயிர் பிழைத்துள்ளார். இந்த விபத்திற்கான காரணம் இதுவரை கண்டறியப்படவில்லை. விமான விபத்துக்கும், போதைப் பொருள் கடத்தல்காரர் கைது செய்யப்பட்டதற்கும் தற்போது வரை எந்த தொடர்பும் இல்லை என்றும் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
கடந்த 1985 ஆம் ஆண்டு அமெரிக்க போதை பொருள் அமலாக்க அமைப்பின் ஏஜென்டான என்ரிக் கேமரேனா சலாசரின் கொலைக்காக கரோ குயின்டெரோவை அமெரிக்கா பின்தொடர்வதுடன், அவரை நாடு கடத்தவும் முயல்கிறது. கரோ குயின்டெரோ, பல ஆண்டுகளாக தப்பியோடிய நிலையில் சினலோவாவில் உள்ள சோயிக்ஸ் நகரில் புதர்களுக்குள் மறைந்திருந்த போது, மோப்ப நாயால் கண்டுபிடிக்கப்பட்டார் என கடற்படை தெரிவித்துள்ளது.