குடியரசுத் துணைத் தலைவர் தேர்தலில், பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி சார்பில், ஜக்தீப் தன்கர் போட்டியிடுவார் என, அக்கட்சி தேசிய தலைவர் ஜே.பி.நட்டா அறிவித்து உள்ளார்.
குடியரசு துணைத் தலைவராக உள்ள வெங்கையா நாயுடுவின் பதவிக் காலம் ஆகஸ்ட் மாதம் 10 ஆம் தேதியுடன் முடிவடைகிறது. இதையொட்டி, குடியரசு துணைத் தலைவர் பதவிக்கான தேர்தல் வருகிற ஆகஸ்ட் மாதம் 6 ஆம் தேதி நடைபெறும் என இந்திய தலைமை தேர்தல் ஆணையம் அறிவித்திருந்தது.
இந்நிலையில், மத்தியில் ஆளும் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி சார்பில், ஜக்தீப் தன்கர் போட்டியிட உள்ளதாக, அக்கட்சியின் தேசிய தலைவர் ஜே.பி.நட்டா அறிவித்துள்ளார். டெல்லியில் நேற்று மாலை நடைபெற்ற பாஜக ஆட்சி மன்றக் குழுக் கூட்டத்திற்கு பிறகு இந்த அறிவிப்பு வெளியாகி உள்ளது. இந்தக் கூட்டத்தில், பிரதமர் நரேந்திர மோடி, மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா உள்ளிட்ட மூத்தத் தலைவர் பங்கேற்றனர்.
தற்போது மேற்கு வங்க மாநிலத்தின் ஆளுநராக ஜக்தீப் தன்கருக்கு வயது 71. 1951 ஆம் ஆண்டு ராஜஸ்தான் மாநிலத்தில் பிறந்த இவர், மத்திய அமைச்சராகவும், எம்பியாகவும் பதவி வகித்துள்ளார். குடியரசுத் துணைத் தலைவர் தேர்தலில் போட்டியிட உள்ளதால், மேற்கு வங்க மாநிலத்தின் ஆளுநர் பதவியை, அவர் விரைவில் ராஜினாமா செய்வார் என எதிர்பார்க்கப்படுகிறது.