இலங்கை முன்னாள் அதிபர் கோத்தபய ராஜபக்சே இந்தியா வருவதற்கான அனுமதி மறுக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன
இலங்கையில் நிலவும் வரலாறு காணாத பொருளாதர நெருக்கடி காரணமாக அரசுக்கு எதிரான போராட்டம் தீவிரமடைந்துள்ளது. இதனால், பிரதமர் ரணில் விக்ரமசிங்கே, அதிபர் கோத்தபய ராஜபக்சே ஆகியோர் தங்களது பதவிகளை ராஜினாமா செய்துள்ளனர். இடைக்கால அதிபராக ரணில் விக்ரமசிங்கே பொறுப்பேற்றுள்ளார். இலங்கையின் புதிய அதிபர் வருகிற 20ஆம் தேதி தேர்ந்தெடுக்கப்பட வாய்ப்புள்ளதாக எதிர்பார்க்கப்படுகிறது.
முன்னதாக, போராட்டக்காரர்கள் இலங்கை அதிபர் மாளிகைக்குள் புகுந்ததையடுத்து அங்கிருந்து தப்பியோடிய கோத்தபய ராஜபக்சே ரகசிய இடத்தில் பதுங்கினார். அவர் எங்கிருக்கிறார் என்ற தகவல் ரகசியமாக வைக்கப்பட்டிருந்த நிலையில், அவர் கடற்படைக்கு சொந்தமான கப்பலில் தப்பி சென்றதாகவும், விமான நிலையத்துக்கு அருகே உள்ள விமானப்படைத்தளத்தில் பதுங்கியுள்ளதாகவும், கொழும்பு அருகே பத்தரமுல்லையில் ராணுவ தலைமையகத்தில் பதுங்கியுள்ளதாகவும் பல்வேறு தகவல்கள் வெளியாகின. மேலும், கோத்தபய ராஜபக்சே இலங்கையில் இருந்து வெளியேறி அண்டை நாட்டுக்கு தப்பி சென்றுள்ளதாக ஒரு தகவலும் வெளியானது. ஆனால், அதற்கு இலங்கை சபாயாநயகர் மறுப்பு தெரிவித்தார். இருப்பினும், அடுத்த சில தினங்களில் கோத்தபய ராஜபக்சே நாட்டை விட்டு வெளியேறியதாக சபாநாயகரே தெரிவித்தார்.
இதனிடையே, தனது மனைவியுடன் கோத்தபய ராஜபக்சே மாலத்தீவில் தஞ்சமடைந்ததாக தெரிவிக்கப்பட்டது. ஆனால், அங்கும் அவருக்கு எதிராக மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால், அங்கிருந்து வெளியேறி அவர் தற்போது சிங்கப்பூரில் உள்ளார். அங்கும் அவருக்கு எதிரான நிலைப்பாடு கிளம்பியதால், சிங்கப்பூரில் 15 நாட்கள் மட்டுமே கோத்தபய ராஜபக்ச தங்க அனுமதி கொடுத்து இருப்பதாகவும், அவருக்கு புகலிடம் தரப்படவில்லை என்றும் சிங்கப்பூர் அரசு விளக்கம் அளித்துள்ளது.
இந்த நிலையில், இந்தியாவுக்கு வருவதற்கான அனுமதியை வழங்க வேண்டும் என்று முன்னாள் அதிபர் கோத்தபய ராஜபக்சே இந்திய அரசை கேட்டிருந்தார். ஆனால் அந்த அனுமதியை வழங்க முடியாது என இந்திய அரசு மறுப்பு தெரிவித்து விட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளான. இதுகுறித்து விவரமறிந்தவர்களிடம் விசாரிக்கையில், “இலங்கையில் நிலவும் பொருளாதார நெருக்கடியை சாதகமாக பயன்படுத்திக் கொண்டு தமிழ்நாட்டில் தனக்கான அரசியலை மேற்கொள்ள பாஜக முயற்சிக்கிறது. அண்ணாமலை சமீபத்தில் இலங்கை சென்று திரும்பியதும் இதன் காரணமாகத்தான். இதனை வைத்து கச்சத்தீவை மீட்கும் யோசனையும் பாஜகவிடம் உள்ளது. இந்த சூழலில் கோத்தபய ராஜபக்சேவை இந்தியாவுக்கு அனுமதித்தால், அது அரசியல் ரீதியாக பாஜகவுக்கு தமிழ்நாட்டில் பின்னடைவை சந்திக்கும். இந்த தகவலை இங்குள்ளவர்கள் பாஜக மேலிடத்துக்கு சுட்டிக்காட்டுள்ளனர். இதனாலேயே, கோத்தபய ராஜபக்சேவுக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது” என்கிறார்கள்.
முன்னதாக, கோத்தபய ராஜபக்ச தனது மனைவியுடன் நாட்டைவிட்டு தப்பி சென்ற நிலையில், அவரின் சகோதரர்களான முன்னாள் பிரதமர் மகிந்த ராஜபக்சேவும், முன்னாள் நிதி அமைச்சர் பசில் ராஜபக்சேவும் வெளிநாடு செல்வதற்கு இலங்கை உச்ச நீதிமன்றம் தடை விதித்துள்ளது.