வரும் காலத்தில் புதிய கொரோனா அலைகள் ஏற்படும்: உலக சுகாதார அமைப்பு!

கொரோனா பாதிப்பு மெல்ல அதிகரித்து வரும் நிலையில், அடுத்த கொரோனா அலைகளுக்கு நாம் தயாராக இருக்க வேண்டும் என்று, உலக சுகாதார அமைப்பின் தலைமை ஆய்வாளர் சவுமியா சுவாமிநாதன் தெரிவித்துள்ளார்.

கடந்த டிசம்பர், ஜனவரி காலத்தில் உலகெங்கும் ஓமிக்ரான் காரணமாக கொரோனா அலை ஏற்பட்டது. நல்வாய்ப்பாக ஓமிக்ரான் அலை லேசான பாதிப்பையே ஏற்படுத்தி இருந்தது. அதன் பின்னர் சில மாதங்களாகவே வைரஸ் பாதிப்பு குறைந்து வந்தது. இந்தச் சூழலில், இப்போது உலகின் பல பகுதிகளிலும் வைரஸ் பாதிப்பு அதிகரிக்கத் தொடங்கி உள்ளது மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது.

தமிழ்நாட்டிலும் கூட கடந்த சில வாரங்களாக வைரஸ் பாதிப்பு தொடர்ந்து அதிகரித்து வருகிறது. சில நாட்களாகவே வைரஸ் பாதிப்பு 2000க்கும் மேலாகவே உள்ளது. தமிழகத்தில் நேற்று மட்டும் 2,312 பேருக்குத் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. சென்னையில் மட்டும் மேலும் 618 பேருக்கு கொரோனா உறுதியாகி உள்ளது. ஆக்டிவ் கேஸ்களும் 17,487 ஆக உயர்ந்து உள்ளது. குறிப்பாக, பல நாட்களுக்குப் பின்னர் கொரோனா காரணமாக ஒருவர் உயிரிழந்துள்ளார். வைரஸ் பாதிப்பு அதிகரிக்கத் தொடங்கி உள்ள நிலையில், ஊரடங்கு அச்சமும் மக்களிடையே எழுந்துள்ளது.

இந்நிலையில், இது தொடர்பாக உலக சுகாதார அமைப்பின் தலைமை ஆய்வாளர் சவுமியா சுவாமிநாதன் கூறியதாவது:-

அடுத்த கொரோனா அலைகளுக்கு நாம் தயாராக இருக்க வேண்டும். புதிய வேரியண்ட்கள் அதிகம் பரவக்கூடியதாக இருக்க வாய்ப்புகள் உள்ளன. ஓமிக்ரான் BA.4 மற்றும் BA.5 வேரியண்ட்கள் வேக்சின் போட்டவர்களுக்கும் பாதிப்பை ஏற்படுத்துகிறது. வரும் காலத்தில் ஏற்படும் கொரோனா அலைகளுக்கு நாம் தயாராக இருக்க வேண்டும். அடுத்து வரும் ஒவ்வொரு அலையும் வேகமாகப் பரவக் கூடிய வகையிலும், நோய் எதிர்ப்புச் சக்தியைத் தவிர்க்கக் கூடியதாகவும் இருக்கும். வைரஸ் பாதிப்பு அதிகமாக இருக்கும்போது, மருத்துவச் சிகிச்சை தேவைப்படுவோரின் எண்ணிக்கையும் அதிகரிக்கும். எனவே, அனைத்து நாடுகளும் கொரோனா பாதிப்பைப் பொறுத்து தேவையான நடவடிக்கைகளை உடனடியாக எடுக்க வேண்டும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

கொரோனா பாதிப்பு மட்டுமின்றி உயிரிழப்புகளும் கணிசமாக அதிகரிக்கத் தொடங்கி உள்ளது. இது தொடர்பாக உலக வங்கியின் மூத்த ஆலோசகர் பிலிப் ஷெல்கென்ஸ் கூறுகையில், “கொரோனா உயிரிழப்புகள் யூ-டர்ன் அடித்து உள்ளது. பல மாதங்கள் தொடர்ந்து குறைந்து வந்த கொரோனா உயிரிழப்புகள் மீண்டும் உயரத் தொடங்கியது. ஓமிக்ரான் BA.5 வகை, கொரோனா கட்டுப்பாடு தளர்வுகள் வேக்சின் பணிகள் இதற்குக் காரணமாகக் கூறப்படுகிறது. பின்தங்கிய நாடுகள் மட்டுமில்லாமல் வளர்ந்த மற்றும் வளரும் நாடுகளிலும் கூட வைரஸ் பாதிப்பு அதிகரித்து வருகிறது. அமெரிக்கா, பிரான்ஸ், இத்தாலி, ஜெர்மனி மற்றும் ஜப்பான் ஆகியவை உயர் வருமானம் கொண்ட நாடுகளில் வைரஸ் பாதிப்பு அதிகரிக்கத் தொடங்கி உள்ளது. அதேபோல பிரேசில் போன்ற வளரும் நாடுகளில் கொரோனா பாதிப்பு உயரத் தொடங்கி உள்ளது. அதேபோல பல நாடுகளிலும் உயிரிழப்புகளும் கணிசமாக அதிகரிக்கிறது” என்றார்.

மேலும், இது தொடர்பாக உலக சுகாதார அமைப்பின் தலைவர் டெட்ரோஸ் அதானோம் கூறுகையில், “BA.4 மற்றும் BA.5 வகை கொரோனா உலகின் பல நாடுகளிலும் வேகமாகப் பரவி வருகிறது. இந்த வகை ஓமிக்ரான் காரணமாக அதிக பேருக்கு மருத்துவச் சிகிச்சை தேவைப்படும் சூழல் உருவாகிறது. இதனால் உயிரிழப்புகளும் கூட அதிகரிக்கும் அபாயம் உள்ளது. எனவே, நாம் எச்சரிக்கை உடன் இருக்க வேண்டும்” என்றார்.