நீட் தேர்வில் ஆள்மாறாட்டம்: 8 பேரை கைது செய்து சிபிஐ விசாரணை!

நீட் தேர்வில் தேர்ச்சி பெறுவதற்காக ஆள் மாறாட்டத்தில் ஈடுபட்ட 8 பேரை சிபிஐ அதிகாரிகள் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இந்தியாவில் எம்.பி.பி.எஸ், பி.டி.எஸ், சித்தா, யுனானி, ஹோமியோபதி ஆகிய மருத்துவ படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கைக்காக மத்திய அரசு சார்பாக நீட் நுழைவுத் தேர்வு நடத்தப்பட்டு வருகிறது. இந்த நிலையில் நாடு முழுவதும் நீட்தேர்வு நேற்று முன்தினம் நடைபெற்றது. தமிழ், இந்தி உட்பட 13 மொழிகளில் நடந்த இந்த தேர்வை நாடு முழுவதும் 10.72 லட்சம் மாணவர்கள் எழுதினர். இந்தியா முழுவதும் மொத்தம் 543 நகரங்களில் 3,800க்கும் மேற்பட்ட தேர்வு மையங்களில் தேர்வு நடைபெற்றது. தேர்வின் உண்மைத் தன்மையை உறுதி செய்யும் பொருட்டும், முறைகேடுகளை தடுக்கும் பொருட்டும், மிகக் கடுமையான நெறிமுறைகளை தேர்வு முகமை பின்பற்றி வருகிறது. தேர்வர்கள் தேர்வு மையத்தினுள் நுழையும் முன்பு உயர் உணர்திறன் கொண்ட உலோக உணர்வி பயன்படுத்தி விரிவான கட்டாய சோதனைக்கு உட்படுத்தப்பட்டார்கள். அதே போன்று, மூடப்பட்ட அறையில் பெண் அலுவலர்களைக் கொண்டு பெண் தேர்வர்கள் சோதனைக்கு உட்படுத்தப்பட்டார்கள். அதுமட்டுமல்லாமல், தேர்வர்களுக்கு தேர்வு அறையிலும் பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டது. இதுமட்டுமல்லாமல் இஸ்லாமிய மாணவியிடம் ஹிஜாப், புர்கா ஆகியவற்றை நீக்கவும், மாணவிகளிடம் தீவிர உடை கட்டுப்பாடு கடைபிடிக்கப்பட்டதாகவும் சர்ச்சைகள் எழுந்துள்ளன.

இந்த நிலையில் நீட் தேர்வில் தேர்ச்சி பெறுவதற்காக டெல்லி மற்றும் ஹரியானாவில் ஆள் மாறாட்டம் நடைபெற்றதாக 8 பேர் சிபிஐ அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளனர். இதுகுறித்து சிபிஐ அதிகாரிகள் தரப்பில், நீட் தேர்வில் ஆள் மாறாட்டம் செய்யப்பட்டது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. ஆள் மாறாட்டம் செய்வதற்காக அடையாள அட்டைகளில் கிராஃபிக்ஸ் செய்யப்பட்டுள்ளன என்று கூறப்பட்டுள்ளது. இந்த விவகாரத்தில் மூளையாக செயல்பட்ட டெல்லி மாநிலம் கவுதம் நகரைச் சேர்ந்த சுஷில் ரஞ்சன் என்பவரை கைது செய்து சிபிஐ அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இவரோடு சேர்த்து ஆள் மாறாட்டத்தில் ஈடுபட்டவர்களையும் சிபிஐ கைது செய்துள்ளதாக கூறப்படுகிறது. இந்த விவகாரத்தில் லட்சக்கணக்கில் பணம் கைமாறியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.