கேரள மாநிலத்தில் நீட் தேர்வு எழுதச் சென்ற மாணவிகளை சோதனை செய்தபோது உள்ளாடைகளில் கொக்கி இருப்பதாக மெட்டல் டிடெக்டர் கருவி எச்சரித்ததால் மாணவியின் உள்ளாடைகளை கழற்ற வேண்டும் என தேர்வு மைய அதிகாரிகள் வற்புறுத்தியதாகவும் இதுகுறித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என அந்த மாணவியின் தந்தை காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ள சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.
நேசனல் டெஸ்டிங் ஏஜென்சி எனப்படும் தேசிய தேர்வு முகமை எம்பிபிஎஸ், பிடிஎஸ் உள்ளிட்ட இளங்கலை மருத்துவப்படிப்புகளுக்கான தேசிய தகுதி மற்றும் நுழைவுத் தேர்வை ஜூலை 17ஆம் தேதியான நேற்று முன்தினம் நடத்தியது. நாடு முழுவதும் சுமார் 18 லட்சத்திற்கும் மேற்பட்ட விண்ணப்பங்கள் தேர்வுக்காக பெறப்பட்ட நிலையில், அதில் 90% மாணவர்கள் மேற்பட்டோர் நுழைவுச் சீட்டை பதிவிறக்கம் செய்தனர். அவர்களிலும் நாடு முழுவதும் 497 நகரங்களில் நடைபெறும் இந்த தேர்வை 18,72,339 மாணவர்கள் எழுதினர்.
நீட் தேர்வின் போது அனைவரும் கடுமையான சோதனைகளுக்குப் பிறகே தேர்வு மையங்களுக்குள் அனுமதிக்கப்பட்டனர். நீட் தேர்வு எழுதும் மாணவர்களுக்கான ட்ரெஸ் கோட் எனப்படும் ஆடை கட்டுப்பாடும் என்டிஏ சார்பில் வெளியிடப்பட்ட நிலையில், உலோகங்கள் கொண்டு செல்லப்பட அனுமதியில்லை எனவும் அறிவிக்கப்பட்டிருந்தது. குறிப்பாக பர்சுகள், கண்ணாடிகள், கைப்பைகள், பெல்ட்கள், தொப்பிகள் , கைக்கடிகாரம், கைக்கடிகாரம், வளையல், கேமரா, ஆபரணங்கள் மற்றும் உலோகப் பொருட்களும் தடைசெய்யப்பட்டிருந்தன. தேர்வு அறைக்குச் சென்ற மாணவ மாணவிகள் கடும் பரிசோதனைகளுக்குப் பிறகு அனுமதிக்கப்பட்ட நிலையில் கேரள மாநிலத்தில் மாணவிகளின் உள்ளாடைகளை தேர்வுமைய அதிகாரிகள் கழற்ற வற்புறுத்தியதாக, மாணவியின் தந்தை காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கேரள மாநிலம் கொல்லம் மாவட்டத்தை சேர்ந்த ஒருவர் தனது மகள் நீட் தேர்வு எழுதுவதற்காக கேரளா மாநிலம் மருத்துவ இன்ஸ்டியூட் ஆப் இன்பர்மேஷன் டெக்னாலஜி வளாகத்தில் உள்ள தேர்வு மையத்திற்கு அழைத்துச் சென்றார். அங்கு தேர்வு மைய அதிகாரிகள் மாணவ மாணவிகளை தனித்தனியே பரிசோதித்துள்ளனர். அப்போது மாணவியின் உடைமைகளை மெட்டல் டிடெக்டர் மூலம் அதிகாரிகள் சோதனை செய்துள்ளனர். அதில் மாணவியின் உள்ளாடையில் உலோக கொக்கி இருந்ததால் மெட்டல் டிடெக்டர் எச்சரிக்கை செய்துள்ளது. இதையடுத்து அந்த கொக்கிகளை அகற்றும்படி அதிகாரிகள் மாணவியை வற்புறுத்தியுள்ளனர். மேலும் அதனை அகற்றாவிட்டால் தேர்வு மையத்திற்குள் அனுமதிக்க முடியாது என வற்புறுத்தியதோடு உள்ளாடை முக்கியமா உங்கள் எதிர்காலம் முக்கியமா என மிரட்டும் தொணியில் பேசியுள்ளனர். இதையடுத்து தேர்வு எழுத வந்திருந்த பெரும்பான்மை மாணவிகள் உள்ளாடைகளை கழற்றி வைத்துவிட்டு தேர்வு எழுத வேண்டிய தர்ம சங்கடமான சூழல் உருவானது. இதனால் அந்த மாணவிகள் மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளானதாக புகார் கூறிய நிலையில் இந்தச் சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இந்த புகார் தேர்வு மைய அதிகாரிகள் மறுத்துள்ள நிலையில் இதுகுறித்து விசாரணை நடத்த வேண்டும் என மாணவியின் தந்தை ஒருவர் காவல் நிலையத்தில் புகார் அளித்ததோடு அந்த மாணவியின் வாக்குமூலத்தையும் பதிவு செய்துள்ளனர். இது தொடர்பாக போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். இதற்கிடையே கேரள மாநில காங்கிரசார் மற்றும் மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு கட்சியினர் இச்சம்பவத்தை கண்டித்து நேற்று போராட்டத்தில் ஈடுபட்டனர். மேலும் மாணவிகளின் உள்ளாடைகளை கழற்றி சோதனை நடத்தப்பட்டதாக கூறப்பட்ட கல்லூரி முன்பும் அவர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
இது பற்றி கல்லூரி நிர்வாகத்தினர் கூறும் போது, நீட் தேர்வு பாதுகாப்பை தனியார் நிறுவனம் மேற்கொண்டது. அவர்கள் மெட்டல் டிடெக்டர் கருவி மூலம் சோதனை நடத்தினர். இதில் உடலில் உலோக பொருள்கள் இருந்தால் பீப் ஒலி எழுப்பும். இதனால் ஏற்பட்ட சந்தேகத்தில் அவர்கள் உள்ளாடைகளை கழற்றி சோதனை செய்திருக்கலாம் என்றனர்.
கேரள மாணவிகளிடம் உள்ளாடைகளை கழற்றி சோதனை செய்த விவகாரம் தொடர்பாக கேரள அரசு மத்திய மந்திரி தர்மேந்திர பிரதானுக்கு கடிதம் எழுதியுள்ளது. இதுபோல கேரள மகளிர் ஆணையமும் இது தொடர்பாக விசாரணை நடத்தி ஒரு வாரத்தில் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் எனக்கூறியுள்ளது. இதையடுத்து இந்த சம்பவம் கேரளாவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.