கள்ளக்குறிச்சி மாணவி மரணம்: மெரினாவில் போலீஸ் குவிப்பால் பரபரப்பு!

கள்ளக்குறிச்சி மாணவி மரணம் தொடர்பாக சென்னை மெரினா கடற்கரையில் போராட்டம் நடத்த திட்டமிட்டிருப்பதாக வந்த தகவலை அடுத்து அங்கு 200-க்கும் மேற்பட்ட போலீஸார் பாதுகாப்பு பணிக்காக குவிக்கப்பட்டுள்ளார்கள்.

கள்ளக்குறிச்சி மாவட்டம், சின்னசேலம் அருகே கனியாமூரில் உள்ள தனியார் பள்ளியில பிளஸ் 2 படித்து வந்தவர் 17 வயது மாணவி. இவர் பள்ளி விடுதியில் தங்கி படித்து வந்தார். கடந்த 13 ஆம் தேதி பள்ளியில் மர்மமான முறையில் இறந்தார். மாணவியின் சாவில் சந்தேகம் இருப்பதாக கூறி அவரது பெற்றோர் மற்றும் உறவினர்கள் தொடர்ந்து போராட்டம் நடத்தி வந்தனர். இந்த நிலையில் கடந்த 3 நாட்களாக சமூகவலைதளங்களில் மாணவியின் மரணத்திற்கு நீதி வேண்டும் என கூறி பல்வேறு கருத்துகள் பகிரப்பட்டு வருகிறது. இதன் மூலம் நேற்று முன் தினம் மாணவியின் மரணத்திற்கு நீதி கேட்டு பல்வேறு அமைப்பினர் கனியாமூர் பகுதியில் திரண்டு போராட்டம் நடத்தினர். ஒரு கட்டத்தில் இது பெரும் கலவரமாக வெடித்தது. பள்ளிக்கு சிலர் தீ வைத்தனர். அங்கிருந்த பேருந்துகள், வாகனங்களையும் தீ வைத்து கொளுத்தினர். மேசை, நாற்காலிகள் உள்ளிட்டவை உடைக்கப்பட்டன. மாணவ, மாணவிகளின் சான்றிதழ்களும் தீவைத்து எரிக்கப்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதனால் பள்ளி வளாகமே போர்க்களமாக மாறியது. இந்த சம்பவம தமிழகத்தில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.

இந்த நிலையில் கள்ளக்குறிச்சி மாணவி மரணம் தொடர்பாக மெரினாவில் ஏராளமானோர் கூட போவதாக சமூக வலைதளங்கள் மூலம் தகவல் பரவியது. சமூக வலைதளங்களிலும் இந்த போராட்டத்திற்கு பலர் அழைப்பு விடுத்துள்ளதாக தெரிகிறது. இதனால போராட்டம் நடைபெறாமல் இருப்பதற்காக முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக சென்னை மெரினா கடற்கரையில் 200-க்கும் மேற்பட்ட போலீஸார் குவிக்கப்பட்டு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகிறார்கள். கலங்கரை விளக்கம் முதல் தலைமைச் செயலகம் வரை போலீஸார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர். மேலும் சமூகவலைதளங்கள் மூலம் தகவல் பரப்பியதை அடுத்து 4 பேரை பிடித்து போலீஸார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

கடந்த 2017 ஆம் ஆண்டு ஜல்லிக்கட்டுவுக்கு ஆதரவாக மெரினாவில் பல்லாயிரக்கணக்கானோர் குவிந்து போராட்டம் நடத்தியது குறிப்பிடத்தக்கது.