உதயநிதி சிறப்பாக வருவதை கண்டு கழகத்தின் தலைவராக மகிழ்கிறேன்: மு.க.ஸ்டாலின்

இயக்கத்தைக் கட்டிக் காக்கும் பல்வேறு துணை அமைப்புகளுடன் இளைஞரணி தன் பணியைத் தொடர்ந்து மேற்கொள்ள வேண்டும். உதயநிதி சிறப்பாக வருவதை கண்டு கழகத்தின் தலைவராக மகிழ்கிறேன் என்று, மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.

தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

கருப்பு – சிவப்பு என்பது கழகத் தொண்டர்கள் ஒவ்வொருவருக்கும் குருதியுடன் கலந்த உணர்வு. அந்த உணர்வுமிக்க இளைஞர்களைக் கொண்டு, 1980-ம் ஆண்டு ஜூலை 20-ம் நாள் கழகத் தலைவர் கலைஞரால் மதுரை ஜான்சிராணி பூங்காவில் தி.மு.கழகத்தின் துணை அமைப்பாக இளைஞரணி உருவாக்கப்பட்டது. இத்தனை பொறுப்புகள் இருந்தாலும் என் இளமைப் பருவம் முதல் இயக்கத்தோடு என்னை இரண்டறக் கலக்கச் செய்த கோபாலபுரம் இளைஞர் தி.மு.க அமைப்பும், தலைவர் கலைஞரால் தொடங்கி வைக்கப்பட்ட இளைஞரணியும் இயக்கத்தில் எனக்குத் தாய் மடியாகும். அதில் தவழ்ந்த காலத்தை இப்போது நினைத்தாலும் இனிமை தருகிறது. எண்ணம் எல்லாம் இளமை ஆகிறது.

இளைஞரணி தொடங்கப்பட்டு 42 ஆண்டுகள் கடந்துள்ள நிலையில், தற்போது அதனை தம்பி உதயநிதி அவர்கள் சிறப்பாக முன்னெடுத்து வருவதைக் கண்டு தந்தையாக அல்லாமல், கழகத்தின் தலைவராக மகிழ்கிறேன். காலத்திற்கும் களத்திற்கும் ஏற்ற வகையில் அதன் செயல்பாடுகள் தொடரவேண்டும் என விரும்புகிறேன். நாடாளுமன்ற – சட்டமன்றத் தேர்தல் களத்தில் தம்பி உதயநிதியும் அவரது இளைஞரணிப் பட்டாளத்தினரும் ஆற்றிய முனைப்பான பணிகள் கழகம் தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணியின் மகத்தான வெற்றிக்குத் துணை நின்றன. குடியுரிமைத் திருத்தச் சட்டம் எதிர்ப்பு, நீட் விலக்குப் போராட்டம், கொரோனா கால நிவாரணப் பணிகள் ஆகியவற்றில் இளைஞரணியின் பங்களிப்பை ஒரு தாயின் உணர்வுடன் கவனித்து பெருமை கொண்டேன். இத்தகைய வேகமும் இளைஞர்களிடம் இலட்சியத்தைக் கொண்டு சேர்க்கின்ற வியூகமும், எதையும் தாங்கும் இந்த இயக்கத்தைக் கட்டிக்காத்து தமிழ்நாட்டை உலகளவில் முன்னேற்றப் பாதையில் கொண்டு செல்வற்குத் துணை நிற்கக்கூடியதாகும். இயக்கத்தைக் கட்டிக் காக்கும் பல்வேறு துணை அமைப்புகளுடன் இளைஞரணி தன் பணியைத் தொடர்ந்து மேற்கொள்ள வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.