இந்திய சீன எல்லைப்பகுதியான அக்சாய் சினில் நெடுஞ்சாலை அமைப்பதற்கான திட்டத்தை சீனா தொடங்கியுள்ளதாக கூறப்படுகிறது.
உலகின் அதிக மக்கள் தொகை கொண்ட நாடுகள் பட்டியலில் முதல் 2 இடங்களை வகிக்கும் நாடுகளான இந்தியாவுக்கும் சீனாவுக்கும் இடையே நீண்ட காலமாக எல்லைப் பிரச்சினை நிலவி வருகிறது. இந்திய பகுதிக்குள் அவ்வப்போது சீனா அத்துமீறி சாலை அமைப்பதும், உள்கட்டமைப்பு பணிகள் செய்ய முயற்சிப்பதும், அதற்கு இந்திய ராணுவம் தக்க பதிலடி கொடுப்பதும் என இந்திய-சீன எல்லையில் அவ்வப்போது சில சம்பவங்கள் நடைபெற்று பதற்றத்தை ஏற்படுத்திச் செல்கிறது.
இந்தியாவின் அருணாசல பிரதேசத்தை தங்கள் நாட்டின் ஒரு பகுதி எனக் கூறும் சீனா, லடாக் பகுதியிலும் தொடர்ந்து அத்துமீறி வருகிறது. சீனாவுக்கு பதிலடியாக இந்தியாவும் எல்லையில் ராணுவ பலத்தை அதிகரித்துள்ளது. கடந்த 2020-ம் ஆண்டு ஜூன் மாதம் 15-ந்தேதி லடாக் எல்லையின் கல்வான் பள்ளத்தாக்கு பகுதியில், சீனப்படையினர் கொடூரமான ஆயுதங்களுடன் வந்து இந்திய வீரர்களுடன் மோதினர். இதில் இந்திய வீரர்கள் 20 பேர் வீர மரணம் அடைந்தனர். இதில், சீனா தரப்பிலும் உயிரிழப்புகள் நேர்ந்தன. இந்தியா – சீனா இடையேயான விவகாரத்தில் தொடர்ந்து மோதல் போக்கு நிலவி வரும் நிலையில், இருநாட்டு ராணுவ அதிகாரிகள் தரப்பில் பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது. இதுவரை 16 கட்டங்களாக பேச்சுவார்த்தை நடைபெற்றுள்ளது.
பதற்றத்தை தணிக்க ஒருபக்கம் முயற்சிகள் நடந்து வந்தாலும், இன்னொரு பக்கம் சீனா தனது வேலையை மறைமுகமாக செய்யத் தொடங்கியுள்ளது. அந்த வகையில், இந்திய எல்லையை ஒட்டியுள்ள அக்சய் ஷின் பிராந்தியத்தில் ஜின் ஜியாங் மாகாணத்தை திபெத்துடன் இணைக்கும் வகையில் நெடுஞ்சாலையை அமைக்க சீனா திட்டமிட்டுள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. 2035-ம் அண்டுக்குள் 4.61 லட்சம் கி.மீ. தொலைவுக்கு சாலை அமைக்க முடிவு செய்துள்ள சீனா, திபெத்தின் லுன்சே கவுண்டியில் இருந்து ஜின்ஜியாங் பிராந்தியத்தின் காஷ்கர் வரை சாலை அமைக்க திட்டமிட்டு உள்ளது.
ஜி695 என்று பெயரிடப்பட்டுள்ள இந்த நெடுஞ்சாலை அருணாசல பிரதேசம், சிக்கிம் போன்ற மாநிலங்களில் இந்திய-சீன அசல் எல்லை கட்டுப்பாட்டுக்கோடு வழியாக செல்கிறது. இந்த சாலைப்பணிகள் முடிவுற்றால் கிழக்கு லடாக்கில் தற்போது சர்ச்சைக்குரிய பகுதிகளாக விளங்கும் தெப்சாங், கல்வான் பள்ளத்தாக்கு உள்ளிட்ட பகுதிகளையும் சீனாவால் எளிதில் அடைய முடியும் என கூறப்படுகிறது. ஆனால் இந்த நெடுஞ்சாலை திட்டத்திற்கான வரைபடம் இதுவரை அதிகாரப்பூர்வமாக வெளியிடப்படவில்லை.
ஏற்கனவே சீனா கடந்த1950-ம் ஆண்டு G219 – என்ற சாலையை இந்திய எல்லையை ஒட்டி அமைத்துள்ளது. இந்த நிலையில், இந்த சாலைக்கு துணை சாலை அமைக்க வேண்டும் அந்நாட்டினர் வலியுறுத்தி வந்த நிலையில் தான் மீண்டும் சீனா G695- சாலை திட்டங்களை வகுத்துள்ளதாக கூறப்படுகிறது. எல்லைப்பகுதிகளை நோக்கி தனது திறன்களை எளிதாக கடத்த ஏதுவாக சீனா, இந்த சாலையை அமைக்க முயற்சிப்பதாகவும் தெரிகிறது. எப்படி ஆயினும் சீனாவின் இந்த முயற்சி இந்திய பாதுகாப்புக்கு கடும் சவால் அளிக்கும் விதமாக இருக்கும் என்றே பார்க்கப்படுகிறது.