கோவை ஈஷா யோகா மையத்தில் இளைஞர் தற்கொலை செய்துகொண்டார்.
கோவையில் ஜக்கி வாசுதேவ் நடத்தும் ஈஷா யோகா மையம் கடந்த பல ஆண்டுகாலமாகவே புகார்கள் வந்து குவிந்த வண்ணம் உள்ளன. வெள்ளியங்கிரி பகுதியில் சாடிவயலுக்கும், தானிக்கண்டிக்கும் இடையேயான யானைகள் வழித்தடத்தில்தான் ஈஷா மையம் பிரம்மாண்டமாக அமைந்துள்ளதாக பல்வேறு அமைப்புகளும் குற்றச்சாட்டுகளை முன்வைத்தன. ஈஷா யோகா மையம் ஏற்கனவே பல்வேறு குற்றச்சாட்டுக்கள் எழுந்துள்ளன. யோகா மையத்திற்கு வரும் பெண்கள் மூளைச் சலவை செய்யப்படுவதாக அந்த மையத்தில் ஒருங்கிணைப்பாளராக இருந்த செந்தில் குமாரே புகார் கூறியிருந்தார். யோகா மையத்திற்கு வரும் பணக்காரர்களை அங்கேயே தங்க வைத்து அவர்களின் சொத்துக்களை அபகரிப்பதற்காக சிலர் பணியாற்றி வருவதாக செந்தில் குமார் மேலும் தெரிவித்திருந்தார்.
2016ஆம் ஆண்டு கோவையை சேர்ந்த பேராசிரியர் காமராஜ் தனது 2 மகள்களை ஜக்கி வாசுதேவ் சன்னியாசியாக்கிவிட்டார் என்று புகார் தெரிவித்தார். அதே ஆண்டில் ஈஷா யோகா மையத்தில் அடைத்து வைக்கப்பட்டுள்ள தனது மகன் அரிகரனை மீட்டுக் கொடுக்குமாறு தூத்துக்குடியை சேர்ந்த தமிழ்செல்வி என்பவர் கோவை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் புகார் அளித்தார்.
ஈஷா சமஸ்கிருத பள்ளியில் படிக்கும் குழந்தைகளை தோப்புக் கரணம் போடச் செய்வது, கழிவறையை சுத்தம் செய்யச் சொல்வது, மாட்டுச் சானத்தை அள்ளச் செய்வது, பைத்தியமாக்குவது என கொடுமைப்படுத்துவதாக மதுரையை சேர்ந்த போலீஸ் ஏட்டு மகேந்திரன் புகார் கூறினார்.
இந்நிலையில் ஈஷா யோகா மையத்தில் இன்று ஆந்திரத்தைச் சேர்ந்த ரமணா(28) என்கிற இளைஞர் தற்கொலை செய்துகொண்டார். இதுகுறித்து உடனடியாக, காவல்துறைக்கு தகவல் அளிக்கப்பட்டதைத் தொடர்ந்து அவரின் உடலைக் கைப்பற்றி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. மேலும், ஆலந்துறை காவல்நிலையத்தில் வழக்குப் பதிவும் செய்யப்பட்டுள்ளது.
மன அழுத்தத்திலிருந்த ரமணா யோகா செய்வதற்காக ஈஷா மையத்திற்கு வந்ததாகவும் பின் அவர் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார் எனவும் தகவல் வெளியாகியுள்ளது.