குட்கா முறைகேடு வழக்கில் முன்னாள் அமைச்சர்கள் விஜயபாஸ்கர், பிவி ரமணா உள்ளிட்ட 12 பேர் மீது சிபிஐ வழக்குப்பதிவு செய்ய தமிழக அரசு அனுமதி வழங்கியுள்ளது.
தமிழகத்தில் குட்கா, பான் மசாலா போன்ற போதைப் பொருட்களை உற்பத்தி செய்யவும், விற்பனை செய்யவும் கடந்த 2013ம் ஆண்டு மறைந்த முன்னாள் முதலமைச்சஎ ஜெயலலிதா தடை விதித்தார். ஆனாலும் குட்கா பொருட்கள் தொடர்ந்து சட்டவிரோதமான முறையில் விற்பனை செய்யப்பட்டு வந்தது. தொடர்ந்து தமிழகத்தில் தடை செய்யப்பட்ட குட்கா பொருள்களை விற்பனை செய்ய முன்னாள் அமைச்சர்கள், ஐபிஎஸ் அதிகாரிகள், வணிக வரித்துறை அதிகாரிகள், சென்னை மாநகராட்சி அதிகாரிகளுக்கு லஞ்சம் தரப்பட்டதாக 2017ம் ஆண்டு குற்றச்சாட்டு எழுந்தது. இந்த குற்றச்சாட்டை தொடர்ந்து வருமான வரித்துறை அதிகாரிகள் பல்வேறு இடங்களில் நடத்தப்பட்ட சோதனையில் முக்கிய ஆவணங்களை கைப்பற்றினர். இந்த விவகாரத்தில் சிபிஐ விசாரணைக்கு உத்தரவிடக்கோரி அப்போதைய திமுக சட்டமன்ற உறுப்பினர் ஜெ.அன்பழகன் சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டது. 40 கோடி ரூபாய் வரை இதில் முறைகேடு நடந்ததாக புகார் வைக்கப்பட்டது. பின்னர் இந்த வழக்கில் சிபிஐ விசாரணை நடத்த உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது.
இந்த நிலையில், முன்னாள் சுகாதாரத்துறை அமைச்சர் சி. விஜயபாஸ்கர், முன்னாள் வணிக வரித்துறை அமைச்சர் ரமணா, சென்னை காவல் ஆணையர்களாக இருந்து ஓய்வுபெற்ற டி. ராஜேந்திரன், ஜார்ஜ் உள்பட 12 பேர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்ய தமிழக தலைமைச் செயலாளர் வெ.இறையன்புக்கு அனுமதி கோரி சிபிஐ கடிதம் எழுதியுள்ளது. முன்னாள் அமைச்சர்கள் மற்றும் ஓய்வுபெற்ற காவல்துறை அதிகாரிகள் மீது வழக்குப்பதிவு செய்ய மாநில அரசின் அனுமதி தேவை என்பதால் இந்த கடிதம் எழுதப்பட்டது.
இந்த நிலையில் குட்கா முறைகேடு வழக்கில் சிபிஐ விசாரணைக்கு தமிழக அரசு அனுமதி வழங்கியுள்ளது. குட்கா முறைகேடு வழக்கில் தொடர்புடைய நபர்கள் மீது வழக்குப்பதிவு செய்து, நடவடிக்கை எடுக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது. தமிழக அரசுத் தரப்பில் அனுமதி வழங்கப்பட்டுள்ளதால் முன்னாள் அமைச்சர்கள், ஐபிஎஸ் அதிகாரிகள் உள்ளிட்டோர் மீது வழக்குப்பதிவு செய்து சிபிஐ விசாரணை விரைவில் தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.