மணீஷ் சிசோடியாவுக்கு எதிரான வழக்கை சிபிஐ விசாரிக்க உத்தரவு!

டெல்லி துணை முதலமைச்சர் மணீஷ் சிசோடியாவுக்கு எதிரான வழக்கை சிபிஐ விசாரிக்க அம்மாநில துணை நிலை ஆளுநர் வினய் குமார் சக்சேனா உத்தரவிட்டு இருப்பது, பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

டெல்லியில், முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் தலைமையிலான ஆம் ஆத்மி கட்சியின் ஆட்சி நடைபெற்று வருகிறது. இந்த மாநில அரசு, கடந்த 2021 ஆம் ஆண்டு நவம்பர் மாதம், ஆயத்தீர்வை சட்டத்தில் திருத்தம் கொண்டு வந்தது. இந்த திருத்ததின்படி மதுபான தயாரிப்பாளர்கள், மதுபானம் விற்பது தொடர்பான லைசென்ஸ், மது வாங்கும் டெண்டர், மதுக்கடைகள் திறக்க அனுமதி உள்ளிட்டவை மூலம் பலரும் கோடிக் கணக்கில் லாபம் பெற்றுள்ளதாக, எதிர்க்கட்சியான பாஜக தரப்பில் புகார் தெரிவிக்கப்பட்டது. மேலும் மதுபான ஆலைகளுக்கு கொரோனா காலத்தில் பல சலுகைகள் வழங்கியதாகவும் குற்றம் சாட்டப்பட்டது.

இந்நிலையில், டெல்லி துணை முதலமைச்சர் மணீஷ் சிசோடியாவுக்கு எதிரான வழக்கை, சிபிஐ அமைப்பு விசாரிக்க, துணை நிலை ஆளுநர் வினய் குமார் சக்சேனா உத்தரவிட்டு உள்ளார். இந்த நடவடிக்கைக்கு, பாஜக மூத்தத் தலைவர்கள் வரவேற்பு தெரிவித்து உள்ளனர்.

இந்த விவகாரம் குறித்து கருத்துத் தெரிவித்த டெல்லி முதலமைச்சரும், ஆம் ஆத்மி கட்சித் தலைவருமான அரவிந்த் கெஜ்ரிவால், “இது மத்திய பாஜக அரசின் பழிவாங்கும் நடவடிக்கை” என கடுமையாக விமர்சனம் செய்தார். இது தொடர்பாக மேலும் அவர் கூறியதாவது:-

மணீஷ் சிசோடியாவை எனக்கு 22 ஆண்டுகளாகத் தெரியும். அவர் ஒரு “கடினமான நேர்மையான” மனிதர். மணீஷ் சிசோடியா மீது சிபிஐக்கு வழக்குப் பதிவு செய்துள்ளது. இன்னும் சில நாட்களில் அவரை கைது செய்ய உள்ளதாகவும் தெரிய வந்துள்ளது. இது முழுக்க முழுக்க பொய் வழக்கு. இந்த வழக்கில் ஒரு துளி கூட உண்மை இல்லை. டெல்லியின் கல்வி முறையை வலுப்படுத்த மணீஷ் சிசோடியா மிகவும் கடினமாக உழைத்து வருகிறார். அதனால் பாராட்டுகளையும், பலரது ஆதரவையும் பெறுகிறார். இதை பொறுத்துக் கொள்ள முடியாத மத்திய அரசு, அவரை தடுக்கும் நோக்கில் இவ்வாறு செயல்படுகிறது. பாஜக நிர்வாகிகள் சாவர்க்கரின் குழந்தைகள் என்றால், நாங்கள், பகத்சிங்கின் குழந்தைகள். நாங்கள் சிறைக்குச் செல்ல பயப்படுபவர்கள் அல்ல.

ஆம் ஆத்மி கட்சியின் புகழ் மற்றும் தேர்தல் வெற்றிக்குக் காரணம், டெல்லி வளர்ச்சி மாதிரி தான். அதனால் தான் தங்கள் கட்சியைத் தாக்கி, எம்எல்ஏக்களை சிறையில் அடைக்கும் முயற்சியில் மத்திய அரசு ஈடுபட்டு வருகிறது. டெல்லியின் வளர்ச்சியை கெடுக்கவே பாஜக இது போன்ற வேலைகளில் ஈடுபட்டு வருகிறது.
இவ்வாறு அவர் கூறினார்.