ஓய்வுபெற்ற குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த், அரசியலமைப்பை விலையாக கொடுத்து பாஜகவின் அரசியல் நோக்கங்களை செயல்படுத்த உதவியவர் என ஜம்மு காஷ்மீர் முன்னாள் முதலமைச்சர் மெகபூபா முப்தி குற்றம்சாட்டியுள்ளார்
நாட்டின் 14 வது குடியரசுத் தலைவராக இருந்த ராம்நாத் கோவிந்தின் பதவிகாலம் நேற்றுடன் நிறைவடைந்தது. இதனை தொடர்ந்து இந்தியாவின் 15 வது குடியரசுத் தலைவரை தேர்வு செய்வதற்கான தேர்தல் கடந்த 18 ஆம் தேதி நடைபெற்றது. இதில் தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில் போட்டியிட்ட திரௌபதி முர்மு வெற்றி பெற்று இன்று குடியரசுத் தலைவராக பதவியேற்றார். ராம்நாத் கோவிந்த் பதவிகாலம் நேற்றுடன் நிறைவடைந்ததை அடுத்து அவர் நாட்டு மக்களுக்கு உரையாற்றிவிட்டு ஓய்வு பெற்றார். குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் ஓய்வுபெறும் நிலையில் நாடாளுமன்றத்தில் உள்ள மைய மண்டபத்தில் கடந்த சனிக்கிழமை அவருக்கு பிரிவு உபசார விழா நடைபெற்றது. பிரிவு உபசார விழா இந்த பிரிவு உபசார விழாவில் பிரதமர் நரேந்திர மோடி குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்துக்கு இரவு விருந்தையும் அளித்தார். இதில், ராம்நாத் கோவிந்த், அவரது மனைவி சவிதா கோவிந்த், நாளை குடியரசுத் தலைவராக பதவியேற்க இருக்கும் திரௌபதி முர்மு, குடியரசு துணைத் தலைவர் வெங்கய்யா நாயுடு, மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா, பல மாநில முதலமைச்சர்கள், மத்திய அமைச்சர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள், பத்ம ஸ்ரீ விருது பெற்றவர்கள் என பலரும் கலந்துகொண்டனர்.
இந்த நிலையில் ஓய்வுபெற்ற முன்னாள் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்தை, ஜம்மு காஷ்மீர் முன்னாள் முதலமைச்சர் மெகபூபா முஃப்தி விமர்சித்து உள்ளார். குடியுரிமை திருத்தச் சட்டம் (சிஏஏ), ஜம்மு காஷ்மீருக்கான சிறப்பு சட்டம் 370 நீக்கம், நாட்டில் சிறுபான்மையினர்கள் மற்றும் தலித் மக்கள் குறிவைக்கப்படுவதாக சுட்டிக்காட்டி ராம்நாத் கோவிந்தை அவர் விமர்சித்தார். “குடியரசுத் தலைவராக இருந்த ராம்நாத் கோவிந்த் பாரதிய ஜனதா கட்சியின் அரசியல் கொள்கைகளை நிறைவேற்றுவதற்காக இந்திய அரசியலமைப்பை விலையாக கொடுத்து இருக்கிறார். ஓய்வுபெற்ற குடியரசுத் தலைவர் இந்திய அரசியலமைப்பை பல முறை நசுக்கிய பாரம்பரியத்தை விட்டுச் செல்கிறார்” என்று அவர் விமர்சனம் செய்து இருக்கிறார்.