மிகவும் பிற்படுத்தப்பட்டோர் பட்டியலில் தங்களை சேர்க்க வேண்டும் என்று தேவேந்திர குல வேளாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
மீண்டெழும் பாண்டியர் வரலாறு, வேந்தர் குலத்தின் இருப்பிடம் எது? ஆகிய இரண்டு நூல்கள் மீதான தடைகள் தகர்க்கப்பட்ட நாளை முன்னிட்டு மள்ளர் மீட்பு கழகம் சார்பில் தமிழர் மெய் வரலாறு மீட்பு நாள், தமிழர் அரசியல் வரலாற்று பெருவிழா திருச்சியில் நடைபெற்றது. விழாவிற்கு தமிழர் தாயகம் கட்சி மாநில தலைவர் கிருஷ்ணசாமி தலைமை தாங்கினார். அவர் பேசுகையில், ஆரியம், திராவிடம், தலித்தியம் ஆகியவற்றினால் தமிழர்களின் மெய் வரலாறு மறைக்கப்பட்டுள்ளது. தமிழக அரசு சட்டநாதன் பரிந்துரையை ஏற்று சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தி தேவேந்திரகுல வேளாளர் மக்களின் விகிதாச்சாரத்தின் அடிப்படையில் இட ஒதுக்கீடு அளிக்க வேண்டும். தாழ்த்தப்பட்டோர் பட்டியலில் இருந்து தேவேந்திர குல வேளாளர்களை நீக்கி மிகவும் பிற்படுத்தப்பட்டோர் பட்டியலில் சேர்க்க வேண்டும் என்றார்.
விழாவில் மள்ளர் மீட்பு கழக மாநில செய்தி தொடர்பாளர் பாசுக்கர சோழன் வரவேற்றுப் பேசினார்.ஊடகப் பிரிவு பொன் கிரேசி தொகுப்புரை வழங்கினார். நிர்வாகிகள் சுந்தர லட்சுமி, மேனகா, முத்துலட்சுமி, வினோதினி ஆகியோர் குத்துவிளக்கு ஏற்றினார்கள். விழாவில் மள்ளர் மீட்பு கழக நிறுவனர், மற்றும் தமிழர் தாயகம் கட்சி நிறுவனர் செந்தில் மள்ளர் சிறப்புரை ஆற்றினார். விழாவில் மாநிலத் தலைவர் தமிழ் மல்லன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். முடிவில் திருச்சி மாவட்ட செயலாளர் ராசு மூப்பன் நன்றி கூறினார்.