கனடாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள போப் பிரான்சிஸ், அங்குள்ள பூர்வக்குடிகள் மீது நிகழ்த்தப்பட்ட இனப்படுகொலைக்கு மன்னிப்பு கோரினார்.
கனடா சென்றுள்ள போப் பிரான்சிஸ் அல்பேடா பகுதியில் கிறிஸ்துவ பள்ளிகள் அமைந்து இருந்த இடத்திற்கு சென்றார். அங்கு நடைபெற்ற கூட்டத்தில் பேசிய அவர், ரோமன் கத்தோலிக்க பள்ளிகளில் பயின்ற பூர்வக்குடி குழந்தைகள் மீதான வன்முறைகளுக்கும் மன்னிப்பு கேட்டார். அந்த சம்பவத்திற்கு ஆதரவாக இருந்தவர்களின் காலனி ஆதிக்க மனநிலைக்கு மன்னிப்பு கோருவதாகவும் அவர் பேசினார். தீய செயல்களுக்கு மன்னிப்பு கோரும் யாத்திரை என இதனை முன்பே குறிப்பிட்டு இருந்த போப், இந்த பயணத்தின் முதல்படியே மன்னிப்பு கோருவது தான் என்றார்.
கனடாவில் கத்தோலிக்க பள்ளிகள் அமைந்திருந்த இடங்களில் கடந்த ஆண்டு ஆயிரக்கணக்கான குழந்தைகளின் சடலங்கள் கண்டெடுக்கப்பட்டன. உலகை உலுக்கிய இந்த சம்பவத்தில் அந்த சடலங்கள் அங்குள்ள பூர்வக்குடிகள் மீதான இனப்படுகொலை என்று கண்டனம் எழுந்தது. இந்த நிலையில் தான் பூர்வக்குடிகள் மீதான தாக்குதலுக்கு போப் பிரான்சிஸ் மன்னிப்பு கோரியுள்ளார். ஆனால் போப் பிரான்சிஸ் காலம் கடந்து மன்னிப்பு கோரி இருப்பதாக பூர்வக்குடி மக்கள் தெரிவித்துள்ளனர்.