பாஜகவுக்கு மாநில அரசுகளை கவிழ்ப்பதே வேலை: மம்தா பானர்ஜி

மக்களால் தேர்ந்ததெடுக்கப்பட்ட மாநில அரசை கவிழ்ப்பதை தவிர பாஜகவுக்கு வேறு வேலை கிடையாது என்று மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி குற்றம்சாட்டியுள்ளார்.

மேற்கு வங்க அமைச்சர் பார்த்தா சாட்டர்ஜி கடந்த 2014 முதல் 2021ம் ஆண்டு வரை கல்வித்துறை மந்திரியாக செயல்பட்டபோது, ஆசிரியர்கள் பணி நியமனத்தில் ஊழல் நடைபெற்றதாக குற்றச்சாட்டுகள் எழுந்தன. இதுகுறித்து விசாரிக்க சிபிஐ அமைப்புக்கு கொல்கத்தா நீதிமன்றம் உத்தரவிட்டது. இந்த விவகாரத்தில் சட்டவிரோத பண பரிமாற்றம் நடைபெற்றதாக குற்றச்சாட்டு எழுந்த நிலையில், அமலாக்கத்துறை வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தியது. இந்த சூழலில் அமைச்சர் பார்த்தா சட்டர்ஜி வீட்டில் கடந்த 22ம் தேதி தொடங்கி அமலாக்கத்துறையினர் சோதனை நடத்தினர். அப்போது அமைச்சர் பார்த்தா சட்டர்ஜியின் உதவியாளரான அர்பிதா முகர்ஜி வீட்டிலும் சோதனை நடைபெற்றது. அதில் ரூ.20 கோடி பறிமுதல் செய்யப்பட்டது. இந்த பணம் ஆசிரியர் நியமன முறைகேட்டுடன் தொடர்புடையது என தகவல் வெளியானது. இதனைத்தொடர்ந்து அமைச்சர் பார்த்தா சாட்டர்ஜி மற்றும் அவரது உதவியாளர் அர்பிதா முகர்ஜியும் கைது செய்யப்பட்டனர்.

இதனிடையே இன்று செய்தியாளர்களை சந்தித்து மேற்கு வங்க பாஜக தலைவர் மிதுன் சக்கரவர்த்தி, திரிணாமுல் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த 38 எம்எல்ஏ -க்கள் தங்களுடன் தொடர்பில் இருப்பதாக கூறி பரபரப்பை ஏற்படுத்தினார்.

இந்த நிலையில் அம்மாநில முதலமைச்சர் மம்தா பானர்ஜி பேசுகையில், மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட மாநில அரசுகளை கவிழ்ப்பதை தவிர பாஜகவுக்கு வேறு வேலையே கிடையாது. அமலாக்கத்துறை உள்ளிட்ட சில அமைப்புகளை கைகளில் வைத்து கொண்டு மாநில அரசுகளை கட்டுப்படுத்த முயல்கிறது. சில நாட்களுக்கு முன் மகாராஷ்டிராவில் செய்த வேலையை, இப்போது ஜார்க்கண்ட்டில் செய்து வருகின்றனர். ஆனால் பாஜகவின் வேலை மேற்கு வங்கத்தில் பலிக்காது. மேற்கு வங்கத்தை உங்கள் வசம் கொண்டு வருவது அவ்வளவு எளிதானதல்ல. 2024ம் ஆண்டில் பாஜக ஆட்சிக்கு வர முடியாது. இந்தியாவில் வேலையில்லா திண்டாட்டம் 40 சதவிகிதமாக அதிகரித்துள்ளது என்று தெரிவித்தார்.

தொடர்ந்து பார்த்தா சட்டர்ஜி விவகாரம் குறித்து பேசுகையில், ஒரு பெரிய நிறுவனத்தை நடத்தும் போது சிலர் தவறு செய்யலாம். அந்த தவறு நிரூபிக்கப்பட்டால், சட்டப்படி தண்டிக்கப்பட வேண்டும். ஆனால் தற்போது, ஊடகங்கள் வழியே மேற்கு வங்கத்தின் மதிப்பை சீர்குலைக்கும் பணிகள் நடைபெற்று வருவதாக மம்தா பானர்ஜி குற்றம்சாட்டினார்.