கைது செய்ய அமலாக்கத் துறைக்கு அதிகாரம் உண்டு: உச்ச நீதிமன்றம்!

பண மோசடி தடுப்பு சட்டத்தின் கீழ், கைது செய்ய அமலாக்கத் துறைக்கு அதிகாரம் உள்ளது என உச்ச நீதிமன்றம் தீர்ப்பு வழங்கி உள்ளது.

அமலாக்கத் துறையினர், பண மோசடி தடுப்பு சட்டத்தின் கீழ் சில விதிகளை எதிர்த்து, மெகபூபா முப்தி, கார்த்தி சிதம்பரம் உள்ளிட்டோர் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். மனுதாரர்கள் சார்பில் ஆஜரான வழக்கறிஞர், கைது செய்யப்படுவதற்கான ஆதாரங்களை காட்டாமல், குற்றம் சாட்டப்பட்டவர்களை கைது செய்வதற்கு தடையற்ற அதிகாரம் அமலாக்கத் துறைக்கு வழங்கப்பட்டது அரசியல் சாசனத்திற்கு விரோதமானதாகும் எனக் கூறியிருந்தார்.

அதே நேரத்தில் மத்திய அரசு, அரசியலமைப்பு சட்டத்தின் படி பண மோசடி தடுப்பு சட்டத்தின் விதிகளை நியாயப்படுத்தியது. பண மோசடி என்பது விஜய் மல்லையா மற்றும் நிரவ் மோடி ஆகியோர் மட்டும் பயன்படுத்தவில்லை. பயங்கரவாதிகளும் பயன்படுத்தப்பட வாய்ப்பு உள்ளதால், பண மோசடி நிதி அமைப்புகளுக்கு மட்டுமல்லாமல், நாட்டின் ஒருமைப்பாடு மற்றும் இறையாண்மைக்கு அச்சுறுத்தலாக மாறும் எனக்கூறி பண மோசடி தடுப்பு சட்டத்தில் செய்யப்பட்ட திருத்தங்களை மத்திய அரசு ஆதரித்தது.

இது தொடர்பான விசாரணை முடிவடைந்த நிலையில் உச்ச நீதிமன்றம் இன்று தீர்ப்பு வழங்கியது. உச்ச நீதிமன்ற நீதிபதிகள் ஏ.எம்.கன்வில்கர், தினேஷ் மகேஸ்வரி மற்றும் சி.டி. ரவிக்குமார் அளித்த தீர்ப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளதாவது:-

பண மோசடியில் ஈடுபட்டவர்களை கைது செய்வது தன்னிச்சையான நடவடிக்கை அல்ல. பண மோசடி தடுப்பு சட்டத்தின் கீழ் சோதனை செய்ய, கைது செய்ய, வழக்குப் பதிவு செய்ய, சீல் வைக்க அமலாக்கத் துறைக்கு அனுமதி உள்ளது. பண மோசடி தடுப்பு சட்டத்தின் கீழ் எடுக்கப்பட்ட நடவடிக்கைகளின் அமலாக்கத் துறை தகவல் அறிக்கையை குற்றம் சாட்டப்பட்டவர்களுக்கு கொடுக்க வேண்டியது இல்லை. இதுவும் எப்ஐஆர்-ம் ஒன்று அல்ல. 2002 ஆம் ஆண்டுக்கு முன் நடந்த முறைகேடு புகார்களில் அமலாக்கத் துறை பண மோசடி தடுப்பு சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க அனுமதி உண்டு. இவ்வாறு நீதிபதிகள் தீர்ப்பில் தெரிவித்து உள்ளனர்.