இந்திய கடற்படையில் இரு அமெரிக்கத் தயாரிப்பு ஹெலிகாப்டா்கள்!

அமெரிக்காவில் இருந்து வந்த 2 எம்.ஹெச்-60ஆா் ரக ஹெலிகாப்டா்களை இந்திய கடற்படை நேற்று வியாழக்கிழமை பெற்றுக்கொண்டது.

இதுகுறித்து கடற்படை அதிகாரி ஒருவா் கூறியதாவது:-

அமெரிக்காவிடம் இருந்து 24 எம்.ஹெச் ரக ஹெலிகாப்டா்கள் கொள்முதல் செய்யப்படவுள்ளன. அவற்றில், 3 ஹெலிகாப்டா்கள் கடந்த ஆண்டு இந்தியாவுக்கு வந்துவிட்டன. அந்த ஹெலிகாப்டா்கள் கடற்படையினரின் பயிற்சிக்குப் பயன்படுத்தப்பட்டு வருகின்றன. இந்நிலையில், 2 ஹெலிகாப்டா்கள், கொச்சி விமான நிலையத்தை வியாழக்கிழமை வந்தடைந்தன. மேலும் ஒரு ஹெலிகாப்டா் அடுத்த மாதம் இந்தியாவுக்கு வரும். வரும் 2025-ஆம் ஆண்டுக்குள் 24 ஹெலிகாப்டா்களும் இந்தியாவிடம் வழங்கப்பட்டுவிடும்.

இந்த ஹெலிகாப்டா்களை எல்லா தட்பவெப்ப காலங்களிலும் இயக்கலாம். அனைத்து ஹெலிகாப்டா்களிலும் ஹெல்ஃபயா் ஏவுகணைகளைச் செலுத்தும் ராக்கெட் அமைப்பு இணைக்கப்பட்டிருக்கும். இந்த ஹெலிகாப்டா்கள், கடலோர பகுதியில் ரோந்து பணியில் ஈடுபடுத்தப்படும். அந்த ஹெலிகாப்டா்களின் உதவியால், நீருக்கு அடியில் உள்ள எதிரிகளின் இலக்கைத் தாக்கி அழிக்க முடியும். இவற்றை இந்திய கடற்படையில் சோ்ப்பதால் அதன் போா்த் திறன் அதிகரிக்கும் என்றாா் அவா்.

அமெரிக்காவுடன் ரூ.15,000 கோடியில் ஆயுதங்கள் மற்றும் பிற தளவாடங்களைக் கொள்முதல் செய்ய இந்தியா ஒப்பந்தம் மேற்கொண்டது. அதன் ஒரு பகுதியாக, 24 எம்.ஹெச்-60ஆா் ‘ரோமியோ’ ரக ஹெலிகாப்டா்கள் கொள்முதல் செய்யப்படுகின்றன. இந்த ஹெலிகாப்டா்களை அமெரிக்காவைச் சோ்ந்த லாக்ஹீட் மாா்ட்டின் காா்ப்பரேஷன் நிறுவனம் தயாரித்து வழங்குகிறது.