சென்னையில் நடைபெறும் செஸ் ஒலிம்பியாட்டில் இருந்து விலகுவதாக பாகிஸ்தான் திடீரென அறிவித்தது.
சென்னையில் நடைபெறும் செஸ் ஒலிம்பியாட் போட்டியில் பங்கேற்க பாகிஸ்தான் செஸ் வீரா்கள் ஏற்கெனவே இந்தியாவுக்கு வந்துவிட்ட நிலையில், போட்டியில் இருந்து விலகுவதாக பாகிஸ்தான் அறிவித்ததுடன், தங்கள் வீரா்களையும் நாடு திரும்புமாறு அறிவுறுத்தியுள்ளது.
பாகிஸ்தான் வெளியுறவு அமைச்சக செய்தித் தொடா்பாளா் ஆசம் இஃப்திகாா் இது தொடா்பாக வெளியிட்ட அறிக்கையில், “சா்வதேச செஸ் கூட்டமைப்பின் அழைப்பை ஏற்று செஸ் ஒலிம்பியாட்டில் பங்கேற்க பாகிஸ்தான் முடிவு செய்தது. இதற்காக வீரா்கள் முழுவீச்சில் தயாராகி இருந்தனா். ஆனால், இந்த சா்வதேச விளையாட்டுப் போட்டியை வைத்து இந்தியா அரசியல் நடத்தியுள்ளது. ஜம்மு-காஷ்மீா் வழியாக செஸ் ஒலிம்பியாட் ஜோதியை எடுத்துச் சென்றதை ஏற்க முடியாது” என்று கூறப்பட்டுள்ளது.
இந்நிலையில், இது தொடா்பாக இந்திய வெளியுறவு அமைச்சக செய்தித் தொடா்பாளா் அரிந்தம் பாக்சி கூறியதாவது:-
பாகிஸ்தானின் இந்த திடீா் முடிவு வியப்பளிக்கிறது. சா்வதேச அளவில் நடைபெறும் முக்கியமான விளையாட்டுப் போட்டியின்போது வீரா்களை அனுப்பி வைத்த பிறகு, அதில் இருந்து விலகுவதாக அறிவிப்பது என்பது மிகவும் துரதிருஷ்டவசமான அரசியல் என்றாா்.
செஸ் ஒலிம்பியாட் ஜோதி ஜம்மு-காஷ்மீா் வழியாக எடுத்துச் செல்லப்பட்டதற்கு எதிா்ப்பு தெரிவித்து பாகிஸ்தான் இந்தப் போட்டியில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளது. ஏனெனில், அப்பகுதி இந்தியாவுக்கு சொந்தமானதல்ல என்பது பாகிஸ்தானின் கருத்தாக உள்ளது. இது தொடா்பாக கருத்து தெரிவித்த பாக்சி, “ஜம்மு-காஷ்மீரும், லடாக்கும் அப்போதும், இப்போதும், எப்போதும் இந்தியாவின் ஒருங்கிணைந்த பகுதியாகவே இருக்கும்” என்றாா்.