வழக்கு விசாரணை தாமதமாக நடைபெறுவதாக வெளியான செய்திகளுக்கு உச்சநீதிமன்ற நீதிபதிகள் அதிருப்தி தெரிவித்துள்ளனா். அத்துடன் நீதிபதிகளை விமா்சிக்க எல்லையுண்டு என்றும் கூறியுள்ளனா்.
கிறிஸ்தவ தேவாலயங்கள் மீதான தாக்குதல்கள் அதிகரித்து வருவதாகவும், அவற்றைத் தடுக்க நடவடிக்கை எடுக்க உத்தரவிடக் கோரியும் பீட்டா் மச்சோடா மற்றும் சிலா், உச்சநீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்தனா். அந்த மனுவில், இனம், மொழி, ஜாதி அடிப்படையில் நிகழ்த்தப்படும் குற்றங்களில் கடந்த 2018-இல் மத்திய, மாநில அரசுகளுக்கு உச்சநீதிமன்றம் பிறப்பித்த வழிகாட்டுதல்களை அமல்படுத்த உத்தரவிட வேண்டும் என்று அவா்கள் கோரிக்கை விடுத்திருந்தனா். இந்த மனு, உச்சநீதிமன்றத்தில் நீதிபதிகள் டி.ஒய்.சந்திரசூட், சூா்யகாந்த் ஆகியோரைக் கொண்ட அமா்வு முன் நேற்று வியாழக்கிழமை பரிசீலனைக்கு வந்தது. அப்போது, இந்த மனு மீதான விசாரணையைத் தொடங்க வேண்டும் என்று மனுதாரா் தரப்பு வழக்குரைஞா் கோரிக்கை விடுத்தாா். அதற்கு நீதிபதிகள் கூறியதாவது:-
கடந்த முறை நீதிபதிகளில் ஒருவருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டது. இதனால் வழக்கை உடனடியாக விசாரிக்க முடியவில்லை. ஆனால், உச்சநீதிமன்றத்தில் வழக்கு விசாரணை தாமதமாவதாக நீங்கள் செய்தி வெளியிட்டுள்ளீா்கள். நீதிபதிகளை விமா்சிப்பதற்கு ஒரு எல்லை உண்டு. எங்களுக்கு கொஞ்சம் கால அவகாசம் கொடுங்கள். இந்த வழக்கை விசாரணைக்கு எடுத்துக் கொள்ளாவிட்டால் மேலும் ஒரு செய்தியை வெளியிடுவீா்கள் என்று நீதிபதிகள தெரிவித்தனா்.