மாணவி மரணம் தொடர்பான வழக்கில் ஐகோர்ட்டில் அரசு அறிக்கை தாக்கல்!

கள்ளக்குறிச்சி மாவட்டம், சின்னசேலம் பள்ளி மாணவி மரணம் தொடர்பான வழக்கில், தமிழக அரசு அறிக்கை தாக்கல் செய்துள்ளது.

சின்னசேலம் பள்ளி மாணவி மரணம் தொடர்பாக, அவரது தந்தை ராமலிங்கம் தொடர்ந்த வழக்கை, உயர் நீதிமன்ற நீதிபதி சதீஷ்குமார் விசாரித்தார். உடலை மறுபிரேத பரிசோதனை செய்ய, மூன்று டாக்டர்கள் மற்றும் ஓய்வு பெற்ற தடயவியல் அதிகாரி அடங்கிய குழுவை நியமித்தும், வன்முறை சம்பவம் தொடர்பான விசாரணைக்கு, சிறப்பு குழுவை அமைக்கவும் உத்தரவிட்டிருந்தார். இதையடுத்து வழக்கு, நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தபோது, போலீஸ் தரப்பில் தலைமை குற்றவியல் வழக்கறிஞர் ஹசன் முகமது ஜின்னா ஆஜராகி, சீலிட்ட உறையில் அறிக்கை தாக்கல் செய்தார்.

தொடர்ந்து, வழக்கறிஞர் ஹசன் முகமது ஜின்னா வாதாடியதாவது:-

பிரேத பரிசோதனை முடிந்து, உடல் ஒப்படைக்கப்பட்டு, இறுதி சடங்கு நடந்தது முழுமையாக வீடியோ பதிவு செய்யப்பட்டது. டி.ஐ.ஜி., தலைமையில் சிறப்பு புலனாய்வு குழு அமைக்கப்பட்டுள்ளது. வதந்தி பரப்பிய 63 ‘யு டியூப்’ தளங்கள்; 31 ‘டுவிட்டர்’ கணக்குகள்; 27 முகநுால் பக்கங்களில் உள்ள பதிவுகளை நீக்க, ‘நோட்டீஸ்’ அனுப்பப்பட்டுள்ளது மாணவி மரணம் தொடர்பான விசாரணையும், பள்ளி வளாகத்தில் நடந்த கலவரம் தொடர்பான விசாரணையும், தனித்தனியாக நடக்கிறது. அனைத்து கோணங்களிலும் விசாரணை நடக்கிறது; யாரையும் பாதுகாக்கும் நோக்கம் கிடையாது. கடந்த 27ம் தேதி முதல், ‘ஆன்லைன்’ வகுப்புகள் துவங்கி உள்ளன. 9 முதல் 12ம் வகுப்பு மாணவர்களுக்கு, அருகில் உள்ள பள்ளிகளில் படிப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் வாதாடினார்.

இதையடுத்து, ‘பள்ளியிலேயே வகுப்புகள் நடக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். அனைத்து பள்ளிகளிலும், மனநல ஆலோசகர்களை நியமிக்க வேண்டும். இதுபோன்ற சம்பவங்களை பெரிதுபடுத்தி, மாணவர்களின் மனதில், ஊடகங்கள், பத்திரிகைகள் தாக்கத்தை ஏற்படுத்தக் கூடாது’ என, நீதிபதி அறிவுறுத்தினார். ‘விசாரணைக்கு இடையூறாக உள்ள சமூக ஊடகங்களுக்கு எதிராக நடவடிக்கை எடுப்பது குறித்து, போலீசார் முடிவெடுக்கலாம்’ என்று கூறிய நீதிபதி, விசாரணையை, ஆகஸ்ட் 29க்கு தள்ளிவைத்தார்.