ஆளுநர் பகத் சிங் கோஷ்யாரிக்கு உத்தவ் தாக்கரே கண்டனம்!

மகாராஷ்டிர மாநில ஆளுநர் பகத் சிங் கோஷ்யாரியின் சர்ச்சைக்குரிய கருத்துக்கு, முன்னாள் முதலமைச்சர் உத்தவ் தாக்கரே கடும் கண்டனம் தெரிவித்து உள்ளார்.

மகாராஷ்டிர மாநிலம் மும்பை புறநகர் மாவட்டம் அந்தேரியில், நேற்று நடந்த நிகழ்ச்சியில், அம்மாநில ஆளுநர் பகத் சிங் கோஷ்யாரி பங்கேற்றார். ராஜஸ்தானியர்களும், குஜராத்திகளும் பங்கேற்ற இந்த நிகழ்ச்சியில் ஆளுநர் பகத் சிங் கோஷ்யாரி பேசியதாவது:-

இங்குள்ள மக்களுக்கு (மகாராஷ்டிர மக்கள்) நான் ஒன்றை கூறுவேன். அது என்னவென்றால், மகாராஷ்டிர மாநிலத்தை விட்டு குறிப்பாக மும்பை, தானேவை விட்டு குஜராத்திகளும், ராஜஸ்தானிகளும் வெளியேற்றப்பட்டால் உங்களிடம் பணம் இருக்காது. நாட்டின் நிதி தலைநகராகவும் மும்பை இருக்காது.
இந்த சமூகத்தைச் சேர்ந்தவர்கள் எங்கு சென்றாலும், அவர்கள் வியாபாரம் செய்வது மட்டுமல்லாமல், பள்ளிகள், மருத்துவமனைகளை உருவாக்குவதன் மூலம் தொண்டு செய்கிறார்கள். இவ்வாறு அவர் கூறினார்.

ஆளுநர் பகத் சிங் கோஷ்யாரியின் இந்த பேச்சு, மகாராஷ்டிர மாநில அரசியலில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது. ஆளுநரின் பேச்சு மகாராஷ்டிரா மீதான வெறுப்புணர்வை காட்டுவதாகவும், அவர் தனது பேச்சுக்கு மன்னிப்பு கேட்க வேண்டும் எனவும் காங்கிரஸ் வலியுறுத்தி உள்ளது.

இந்த விவகாரத்திற்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ள சிவசேனா மூத்தத் தலைவர் சஞ்சய் ராவத், கடுமையாக உழைக்கும் மராத்தி மக்களை ஆளுநர் அவமதித்து விட்டதாக குற்றம் சாட்டி உள்ளனர். மேலும், பல்வேறு அமைப்புகள் ஆளுநர் பகத் சிங் கோஷ்யாரி மன்னிப்பு கேட்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளன.

இந்நிலையில், இந்த விவகாரம் குறித்து, சிவசேனா கட்சித் தலைவரும், முன்னாள் முதலமைச்சருமான உத்தவ் தாக்கரே, மும்பையில் இன்று செய்தியாளர்களிடம் கூறியதாவது:-

மகாராஷ்டிர மாநில ஆளுநர் பகத் சிங் கோஷ்யாரி, ஹிந்துக்களிடையே பிளவை ஏற்படுத்துகிறார். அவரது இந்த கருத்து, மராத்தி பேசும் மண்ணின் மைந்தர்கள் மற்றும் மராத்தி பெருமையை அவமதிப்பது போல் உள்ளது. அவரை வீட்டிற்கு அனுப்புவதா அல்லது சிறைக்கு அனுப்புவதா என்பதை அரசு முடிவு செய்ய வேண்டும். ஆளுநர் என்பவர், குடியரசுத் தலைவரின் தூதர். அவர், குடியரசுத் தலைவரின் வார்த்தைகளை நாடு முழுவதும் எடுத்துச் செல்பவர். அப்படிப்பட்ட பொறுப்பில் உள்ள ஆளுநர், தவறுகளை செய்தால், அவர் மீது யார் நடவடிக்கை எடுப்பார்கள்? அவர் மராத்தியர்களையும், அவர்களின் பெருமையையும் அவமதித்து விட்டார். மராத்தி மக்கள் மீது ஆளுநருக்கு உள்ள வெறுப்புணர்வு வெளிவந்து விட்டது. மராத்தி மக்களிடம் ஆளுநர் பகத் சிங் கோஷ்யாரி உடனடியாக மன்னிப்பு கேட்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

இதற்கிடையே, ஆளுநர் பகத் சிங் கோஷ்யாரி கருத்துத் தெரிவித்த மகாராஷ்டிர மாநில முதலமைச்சரும், சிவசேனா அதிருப்தித் தலைவருமான ஏக்நாத் ஷிண்டே, “அது ஆளுநரின் தனிப்பட்ட கருத்து. அதற்கு தான் ஆதரவு தெரிவிக்கவில்லை” எனக் கூறினார்.