கர்நாடகாவில் இருந்து பாஜகவை வரும் தேர்தலில் வீழ்த்துவோம்: சித்தராமையா!

கர்நாடகாவில் இருந்து பாஜகவை வரும் தேர்தலில் வீழ்த்துவோம் என்று, கர்நாடக முன்னாள் முதலமைச்சர் சித்தராமையா தெரிவித்துள்ளார்.

ஒவ்வொரு வருடமும், தமிழகம் மற்றும் இந்திய அளவில் சமூகம், அரசியல், பண்பாடு, கலை-இலக்கியம் போன்ற தளங்களில் சிறந்து விளங்கும் ஆளுமைகளுக்கு விசிக சார்பில் விருதுகள் வழங்கப்பட்டு வருகிறது. அதில் ஆண்டுதோறும் அம்பேத்கர் கொள்கைகளுக்கு ஆதரவாக குரல் கொடுப்பவர்களுக்கு ‘அம்பேத்கர் சுடர்’ என்ற பெயரில் விருது வழங்கப்பட்டு வருகிறது. அதன்படி இந்த ஆண்டுக்கான அம்பேத்கர் சுடர் விருதுக்கு கர்நாடக சட்டசபை எதிர்க்கட்சி தலைவர் சித்தராமையா தேர்வு செய்யப்பட்டு உள்ளார்.

இந்த நிலையில் சென்னையில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் விருது இன்று மாலை கலைவாணர் அரங்கத்தில் நடைபெறுகிறது. இதில் பங்கேற்பதற்காக கர்நாடக முன்னாள் முதலமைச்சர் சித்தராமையா சென்னை வந்தார். இவரை தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி, விசிக தலைவர் திருமாவளவன் உள்ளிட்ட நிர்வாகிகள் வரவேற்றனர். இதனைத்தொடர்ந்து சென்னை அண்ணா அறிவாலயம் வந்த சித்தராமையாவை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பொன்னாடை போர்த்தி வரவேற்றார். அதனைத்தொடர்ந்து புத்தகங்களை பரிசாக வழங்கினார். இந்த சந்திப்பின் போது கே.எஸ்.அழகிரி, திருமாவளவன் ஆகியோர் உடனிருந்தனர். இது மரியாதை நிமித்தமான சந்திப்பு தான் என கூறப்பட்டுள்ளது. மேலும், இந்த சந்திப்பின் போது முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உடல்நிலை குறித்து சித்தராமையா கேட்டறிந்துள்ளார்.

இதனைத்தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்து சித்தராமையா கூறியதாவது:-

விடுதலை சிறுத்தைகள் கட்சியின் விருது பெறுவதற்காக தமிழ்நாடு வந்துள்ளேன். அம்பேத்கர் சுடர் விருது பெறுவது மிகவும் மகிழ்ச்சி. முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை மரியாதை நிமித்தமாகவே சந்தித்தேன். நான் கேட்டது, படித்ததில் ஸ்டாலின் தலைமையிலான திமுக அரசு சிறப்பாக செயல்படுகிறது. பெரியாரால் திராவிட இயக்கம் மிகவும் உறுதியானது. அம்பேத்கர், பெரியார் கொள்கைகளை பின்பற்ற வேண்டும். பெரியார், அம்பேத்கர் கொள்கைகளை திருமாவளவன் பின்பற்றுகிறார்.

ஆந்திரப் பிரதேசம், தமிழ்நாடு, கேரளா, தெலங்கானா என தெற்கில் பாஜகவால் நுழைய முடியாது. ஆனால் கர்நாடகாவில் நுழைந்துள்ளனர். அவர்களை விரைவில் வீழ்த்துவோம். அதற்காக முயற்சி செய்து வருகிறோம். வரும் நாடாளுமன்றத் தேர்தலில் பாஜக, ஆர்எஸ்எஸ்-ஐ அனைவரும் வீழ்த்துவோம். இவ்வாறு அவர் கூறினார்.