அல்கொய்தா பயங்கரவாத இயக்கத்தின் தலைவர் ஒசாமா பின்லேடனின் குடும்பத்தினரிடம் இருந்து ஒரு மில்லியன் அமெரிக்க டாலர்களை பிரிட்டன் இளவரசர் சார்லஸின் அறக்கட்டளை பெற்றதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
செப்டம்பர் 11 தாக்குதலுக்கு மூளையாக செயல்பட்டவர் ஒசாமா பின்லேடன். இவர் அல்கொய்தா என்ற பயங்கரவாத அமைப்பை தொடங்கினார். இந்த அமைப்பு மூலம் உலகின் பல்வேறு பகுதிகளில் நாசவேலைகளை திட்டமிட்டு செய்திருந்ததாக தெரிகிறது. இவர் 1988ஆம் ஆண்டு இந்த இயக்கத்தை தொடங்கினார். இதனால் இவரது சவுதி குடியுரிமை பறிக்கப்பட்டது. இதையடுத்து ஆப்கானிஸ்தானில் இவர் தஞ்சமடைந்திருந்தார். அமெரிக்காவின் வர்த்தக மையம் மற்றும் பென்டகனை அல்கொய்தா தாக்கியதன் மூலம் அமெரிக்காவால் மிக மோசமான தீவிரவாதியாக பார்க்கப்பட்டார் ஒசாமா பின்லேடன். இந்த நிலையில் பாகிஸ்தானில் பதுங்கியிருந்த ஒசாமா பின்லேடன் 2011 ஆம் ஆண்டு அமெரிக்க அதிரடி படையினரால் சுட்டுக் கொல்லப்பட்டார்.
இந்த சூழலில் ஒசாமா பின்லேடனினின் சகோதரர்களான பாக்ரி மற்றும் ஷாஃபீக்கிடம் இருந்து இங்கிலாந்து அரசு குடும்பத்தைச் சேர்ந்த சார்லஸ் நடத்தி வரும் அறக்கட்டளையானது கடந்த 2011 ஆம் ஆண்டு முதல் 2015 ஆம் ஆண்டு வரை 3.1 மில்லியன் அமெரிக்க டாலர்களை நன்கொடையாக பெற்றதாக லண்டன் நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளது. இந்த நிதியை பேரம் பேசி முடித்தவர் இளவரசர் சார்லஸ் என சொல்லப்படுகிறது. இந்த பணத்தை சூட்கேஸ் மற்றும் பைகளில் பெற்றதாகவும் கூறப்படுகிறது. பயங்கரவாதியாக அறியப்பட்ட ஒசாமா பின்லேடனின் குடும்பத்தினரிடம் இருந்து நன்கொடை பெற்றால் அது அரண்மனைக்கு கெட்ட பெயரையும் சிக்கலையும் ஏற்படுத்தும் என அரண்மனை நிர்வாகிகள் எத்தனையோ முறை சார்லஸுக்கு அறிவுரை வழங்கினராம். ஆனாலும் அவர் கேட்காமல் இந்த நிதியை பெற்றதாக கூறப்படுகிறது. இதுகுறித்து சார்லஸ் தரப்பு எந்த வித அறிக்கையையும் வெளியிடவில்லை.
ஒசாமா பின்லேடன் பயங்கரவாதியாக திகழ்ந்தாலும் இவரது சகோதரர்களான பாக்ரி மற்றும் ஷாஃபீக் பின்லேடன் ஆகியோர் சவுதியில் மிகவும் செல்வாக்கு வாய்ந்தவர்கள். இவர்கள் இருவரும் சவுதி அரசு குடும்பத்தினருடன் நெருக்கமாக பழகக் கூடியவர்கள். இவர்கள் பன்னாட்டு கட்டுமான தொழிலை மேற்கொண்டு வந்தார்கள். இதன் மூலம் இவர்கள் இருவரும் செல்வந்தர்களாகினர். இதன் மூலம் இவர்கள் இருவரும் பயங்கரவாத செயல்களில் ஈடுபட்டிருக்கவோ, நிதியுதவி செய்திருக்கவோ வாய்ப்பே இல்லை. கடந்த 1994 ஆம் ஆண்டு சவுதி குடியுரிமை பறிக்கப்பட்டதுமே ஒசாமா பின்லேடனை அவரது குடும்பத்தினர் தனிமைப்படுத்திவிட்டனர். எனவே ஒசாமா பின்லேடன் வேறு அவரது சகோதரர்களின் வாழ்க்கை வேறு என சொல்லப்படுகிறது.