ஜார்க்கண்ட் காங்கிரஸ் எம்எல்ஏக்களுக்கு 10 நாள் போலீஸ் காவல்!

மேற்கு வங்காளத்தில் கட்டுக்கட்டாக பணத்துடன் சிக்கிய ஜார்க்கண்ட மாநில காங்கிரஸ் எம்.எல்.ஏக்கள் 3 பேரையும் போலீசார் ஹவுரா கோர்ட்டில் ஆஜர்படுத்தினர். அப்போது நீதிபதிகள் 3 பேரையும் 10 நாள் போலீஸ் காவலில் வைத்து விசாரிக்க உத்தரவிட்டனர்.

ஜார்க்கண்ட் மாநிலத்தில் முக்தி மோர்ச்சா மற்றும் காங்கிரஸ் கூட்டணி ஆட்சி நடந்து வருகிறது. மாநிலத்தின் முதல்வராக முக்தி மோச்சா கட்சியின் ஹிமந்த் சோரன் என்பவர் ஆட்சி செய்து வருகிறார்.
இந்த நிலையில், மேற்கு வங்காள மாநிலத்தின் ஹவுரா மாவட்டம் அருகே உள்ள தேசிய நெடுஞ்சாலையில் ரகசிய தகவலின் பேரில் போலீசார் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அந்த தேசிய நெடுஞ்சாலையில் வேகமாக வந்த ஒரு சொகுசு காரை போலீசார் வழிமறித்து சோதனையிட்டனர். இதில் அந்த காரில் ஜார்க்கண்ட் மாநிலத்தின் இர்பான் அன்சாரி, ராஜேஷ் கச்ஷப், நமன் பிக்சல் ஆகிய 3 எம்.எல்.ஏக்களும் அவர்களுடன் மேலும் 2 பேரும் இருந்தனர். எனினும் போலீசார் அந்த காரில் சோதனை நடத்தினர். இந்த சோதனையில், காரின் பின் இருக்கையில் கட்டுக்கட்டாக பணம் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இந்த பணத்தை பார்த்து அதிர்ச்சியடைந்த போலீசார் அதில் இருந்த பணத்தை பறிமுதல் செய்தனர். இதில் மொத்தம் 48-முதல் 50 லட்சம் இருக்கும் என தெரிவித்தனர்.

இதையடுத்து போலீசார் ஜார்க்கண்ட் காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்களான இர்பான் அன்சாரி, ராஜேஷ் கச்ஷப், நமன் பிக்சல் ஆகிய 3 பேரையும் கைது செய்தனர். அவர்களிடம் போலீசார் தீவிர விசாரணை நடத்தினர். இவ்வளவு பணம் எங்கிருந்து கொண்டு வந்தீர்கள், எங்கு கொண்டு செல்கிறீர்கள் என பல்வேறு கோணங்களில் விசாரணை மேற்கொண்டனர். காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் காரில் இருந்து கட்டுக்கட்டாக பணம் பறிமுதல்செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. இதற்கிடையே, ஜார்க்கண்ட் மாநிலத்தில் காங்கிரஸ் கூட்டணி ஆட்சியை கவிழ்க்க பாரதிய ஜனதா முயற்சிப்பதாக காங்கிரஸ் குற்றஞ்சாட்டியது.

இந்த நிலையில் கைது செய்யப்பட்ட 3 எம் எல் ஏக்களையும், போலீசார் ஹவுரா கோர்ட்டில் இன்று ஆஜர்படுத்தினர். அப்போது வழக்கை விசாரித்த நீதிபதி, காரில் கட்டுக்கட்டாக பணத்துடன் சிக்கிய 3 காங்கிரஸ் எம்.எல்.ஏக்களையும் 10 நாட்கள் போலீஸ் காவலில் வைத்து விசாரிக்க உத்தரவிட்டது. இதையடுத்து 3 பேரையும் போலீசார் அழைத்து சென்றனர்.