தேர்தல் ஆணைய கூட்டத்தில் அ.தி.மு.க. சார்பில் நாங்க மட்டுமே பங்கேற்றோம். கோவை செல்வராஜ் எந்த கட்சி என்பதை தேர்தல் ஆணையத்திடம் கேட்க வேண்டும் என்று ஜெயக்குமார் கூறினார்.
வாக்காளர் பட்டியலுடன் ஆதார் எண்ணை இணைக்கும் நடவடிக்கைகள் தொடர்பாக தேர்தல் ஆணையம் இன்று அனைத்து கட்சி கூட்டத்துக்கு ஏற்பாடு செய்திருந்தது. தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு தலைமையில் சென்னை தலைமை செயலகத்தில் நடைபெற்ற இந்த கூட்டத்தில் அதிமுக சார்பில் எடப்பாடி பழனிசாமி தரப்பில் பொள்ளாச்சி ஜெயராமன், ஜெயக்குமார் பங்கேற்றனர். ஓ.பன்னீர் செல்வம் தரப்பில் கோவை செல்வராஜ் கலந்து கொண்டார். அருகருகில் மூன்று பேரும் அமர்ந்திருந்த நிலையில் ஒருவருக்கொருவர் பேசிக் கொள்ளவில்லை. இந்த கூட்டத்தில் பேசுவதற்கு மூன்று பேருக்கும் வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது.
கூட்டத்துக்குப் பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த ஜெயக்குமார், “வாக்காளர் அடையாள அட்டையுடன் ஆதார் அட்டையை இணைப்பதை வரவேற்கிறோம். வாக்காளர் பட்டியலில் உள்ள குளறுபடிகளை நீக்கி முழுமையான வாக்காளர் பட்டியலை வெளியிட வேண்டும். ஆதார் பதிவு செய்யாவிட்டாலும் மற்ற 11 ஆவணங்களை வாக்காளர் அடையாள அட்டையுடன் இணைக்க வேண்டும் என்ற கோரிக்கையை அதிமுக சார்பில் முன்வைத்தோம். அதிமுக சார்பில் நானும் , பொள்ளாச்சி ஜெயராமனும் கலந்து கொண்டோம். கோவை செல்வராஜ் எந்த கட்சியைச் சார்ந்தவர் என்பது தெரியாது. கோவை செல்வராஜ் எந்த கட்சி சார்பில் பங்கேற்றார் என்பதை தேர்தல் ஆணையத்திடம்தான் கேட்க வேண்டும். யராவது எதையாவது சொல்வார்கள் அதை எல்லாம் சீரியசாக எடுத்துக்கொள்ள கூடாது” என்று கூறினார்.
அதன் பின்னர் கோவை செல்வராஜ் செய்தியாளர்களைச் சந்தித்த போது, “இடைக்காலத்தில் கட்சியில் நடைபெற்ற கூத்துக்கள் தேர்தல் ஆணையத்தின் பதிவாகவில்லை. ஒருங்கிணைப்பாளர் ஓ.பி.எஸ் அளித்த கடிதத்தின் அடிப்படையில் கலந்து கொண்டேன். அதிமுக பெயர் பலகையை தனது பக்கம் எடுத்து வைத்து கொண்டதன் மூலம் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் இன்று தரமில்லாத செயலை செய்துள்ளார்” என்று கோவை செல்வராஜ் பேசினார்.
ஓபிஎஸ் தரப்பில் இருந்து நீங்கள் ஒருவர் மட்டுமே வந்துள்ளீர்களே என்று செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு பதிலளித்த செல்வராஜ், சிங்கம் சிங்கிளாக தான் வரும். அண்ணன் அனுப்புகிற ஒரு ஆள் போதும் இதுபோன்றவர்களை அடக்கி விடடலாம் என்று பேசினார் கோவை செல்வராஜ்.