காங்கிரஸ் எம்பிக்கள் மீதான சஸ்பெண்ட் ரத்து: ஓம் பிர்லா

நாடாளுமன்ற மக்களவை காங்கிரஸ் எம்பிக்கள் மீதான சஸ்பெண்ட் நடவடிக்கை ரத்து செய்யப்படுவதாக, மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா தெரிவித்து உள்ளார்.

நாடாளுமன்ற மழைக்காலக் கூட்டத்தொடர், கடந்த ஜூலை மாதம் 18 ஆம் தேதி தொடங்கியது. இந்தக் கூட்டத்தொடர், வரும் 12 ஆம் தேதி வரை நடைபெற உள்ளது. ஜிஎஸ்டி, அக்னிபத் திட்டம், பெட்ரோல், டீசல் விலை உயர்வு உள்ளிட்ட முக்கிய பிரச்னைகள் குறித்து, நாடாளுமன்றத்தின் மக்களவையிலும், மாநிலங்களவையிலும் எதிர்க்கட்சி எம்பிக்கள் தொடர்ந்து முழக்கங்களை எழுப்பி வருகின்றனர். இதனால் இரண்டு அவைகளிலும் அலுவல்கள் பாதிக்கப்பட்டு உள்ளன. இதற்கிடையே, நாடாளுமன்ற மக்களவையில் கடந்த வாரம் அமளியில் ஈடுபட்டதாகக் கூறி, காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த எம்பிக்கள் மாணிக்கம் தாகூர், ஜோதிமணி, ரம்யா ஹரிதாஸ், டிஎன் பிரதாபன் ஆகியோர், கூட்டத்தொடரில் இருந்து சஸ்பெண்ட் செய்யப்பட்டனர். இதற்கு எதிர்ப்புத் தெரிவித்து நாடாளுமன்றத்தில் அவர்கள் போராட்டம் நடத்தி வந்தனர். மேலும், இந்த பிரச்னையை, இரண்டு அவைகளிலும் எதிர்க்கட்சி எம்பிக்கள் எழுப்பினர்.

இந்நிலையில் இன்று பிற்பகல் 2 மணிக்கு மக்களவைக் கூடியது. அப்போது, காங்கிரஸ் மூத்தத் தலைவர் அதிர் ரஞ்சன் சவுத்ரி, காங்கிரஸ் எம்பிக்கள் மீதான சஸ்பெண்ட் நடவடிக்கையை ரத்து செய்ய வேண்டும் என, மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லாவிடம் கோரிக்கை விடுத்தார். இதை ஏற்றுக் கொண்ட அவர், சஸ்பெண்ட் நடவடிக்கை ரத்து செய்யப்படுவதாகவும், இனி, அவையில் பதாகைகளை ஏந்தி போராட்டம் நடத்தக் கூடாது என, எச்சரிக்கை விடுத்தார். சஸ்பெண்ட் ரத்து செய்யப்பட்டதை அடுத்து, காங்கிரஸ் எம்பிக்கள் மாணிக்கம் தாகூர், ஜோதிமணி, ரம்யா ஹரிதாஸ் ஆகியோர், மூத்தத் தலைவர் அதிர் ரஞ்சன் சவுத்ரி உடன் மக்களவைக்கு சென்றனர்.