எப்படி ஊழல் செய்யனும்னு திமுக மக்களவை உறுப்பினர் ஆ.ராசாவுக்கு தெரியும், பாஜகவுக்கு தெரியாது என்று பாஜக எம்எல்ஏ வானதி சீனிவாசன் தெரிவித்துள்ளார்.
இந்தியாவில் கடந்த 26ம் தேதி 5 ஜி அலைகற்றைக்கான ஏலம் தொடங்கியது. பார்தி ஏர்டெல், ரிலையன்ஸ் ஜியோ, வோடபோன் – ஐடியா, அதானி குழுமம் ஆகிய 4 நிறுவனங்கள் ஏலத்தில் பங்கேற்றன. இதில் மொத்தமாக 72,098 மெகாஹெர்ட்ஸ் அலைக்கற்றை அரசு ஏலம்விட்டது. இதில் 51.236 மெகாஹெர்ட்ஸ் ரூ.1,50,173 கோடிக்கு ஏலத்தில் விற்பனையானது. அதில் அதிகபட்சமாக முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம், 700, 800, 1800, 3300 மெகாஹெர்ட்ஸ் மற்றும் 26 ஜிகாஹெர்ட்ஸ் அலைவரிசைகளில் 24,740 மெகாஹெர்ட்ஸ் அலைக்கற்றையை பெற்றது. அதேபோல் மொத்த ஏலத்தொகையான ரூ.1,50,173 கோடியில், அதிகபட்சமாக ரிலையன்ஸ் ஜியோ நிறுவனத்தின் ஏலத்தொகை ரூ.88,078 கோடியாகும். பார்த்தி ஏர்டெல் நிறுவனத்தின் ஏலத்தொகை ரூ.43,048 கோடி, வோடப்போன் – ஐடியா நிறுவனத்தின் ஏலத்தொகை ரூ.18,799 கோடி, அதானி டேட்டா நெட்ஒர்க்சின் ஏலத்தொகை ரூ.212 கோடியாகும்.
இதுகுறித்து திமுக நாடாளுமன்ற உறுப்பினர் ஆ.ராசா செய்தியாளர்களை சந்தித்து கூறுகையில், 5 ஜி அலைக்கற்றை ஏலத்தில் முறைகேடு நடைபெற்றுள்ளது. 5 ஜி அலைக்கற்றை ரூ.5 லட்சம் கோடிக்கு ஏலம்போகும் என்று மத்திய அரசு கூறியது. ஆனால் ரூ.1.5 லட்சம் கோடிக்கு தான் சென்றுள்ளது. எஞ்சிய பணம் எங்கு சென்றது என்பது பற்றி மத்திய அரசு தான் பதிலளிக்க வேண்டும். 5 ஜி ஏலம் முறையாக நடத்தப்படவில்லை என்று குற்றம்சாட்டினார். இதற்கு பதிலலித்துள்ள பாஜக எம்எல்ஏ வானதி சீனிவாசன் கூறியதாவது:-
ஆகஸ்ட் 13 முதல் 15 வரை அனைத்து வீடுகள், அலுவலகங்களில் தேசிய கொடியை ஏற்ற வேண்டும் என பிரதமர் மோடி கேட்டுக்கொண்டுள்ளார். அதற்காக பாஜக நிர்வாகிகள் தங்கள் பணியை மேற்கொண்டு வருகின்றனர். பாஜக மகளிரணி சார்பில் வந்தே மாதரம் பாடலை பாடி தேசிய கொடியை எந்தியவாறு விழிப்புணர்வு செய்ய உள்ளோம். இந்த 3 நாட்கள் நடைபெறும் நிகழ்ச்சிகளில் பல்வேறு கலைத்துறையை சேர்ந்தவர்கள் பங்கேற்க உள்ளனர்.
நாட்டிற்கு இதுவரை இல்லாத அளவிற்கு ஒரு லாபத்தை 5 ஜி அலைக்கற்றை ஏலம் பெற்று தந்துள்ளது. இதுபற்றி குறை கூறும் திமுக எம்பி ஆ.ராசாவுக்கு தான் இதில் எவ்வாறு ஊழல் செய்யலாம் என்று தெரியும். 5G அலைக்கற்றையில் ஊழல் நடந்திருப்பதாக சொல்லும் ராசா, அதற்கான ஆதாரத்தை முன்வைக்கட்டும். அதுமட்டுமின்றி, இந்த பாஜக அரசு ஒரு குற்றச்சாட்டு கூட இல்லாமல் 8 ஆண்டுகள் ஆட்சி நடத்தி வருகிறது. இவ்வாறு அவர் கூறினார்.