உணவுப்பொருட்களுக்கு ஜி.எஸ்.டி. வரியை திரும்ப பெற வேண்டும்: வைகோ

உணவுப்பொருட்களுக்கு ஜி.எஸ்.டி. வரியை திரும்ப பெற வேண்டும் என்று, ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ கூறினார்.

பாராளுமன்ற மேல் சபையில் அத்தியாவசியப் பொருட்களின் விலை உயர்வு குறித்த விவாதத்தில் ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ எம்.பி. கலந்து கொண்டு பேசியதாவது:-

அரிசி, கோதுமை, பால் மற்றும் பால் பொருட்கள் போன்ற அத்தியாவசிய உணவுப் பொருட்களுக்கு ஒன்றிய அரசு ஜி.எஸ்.டி. வரி விதித்துள்ளது அவமானமாகும். இது பொருளாதாரத்தில் தொடர் பாதிப்பை ஏற்படுத்தும். தவறான பொருளாதாரக் கொள்கைகள் காரணமாக, அமெரிக்க டாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு வீழ்ச்சியடைந்துள்ளது. அதன் காரணமாக, எண்ணெய் இறக்குமதி கட்டணம் உட்பட அனைத்து இறக்குமதி பொருட்களும் விலை உயர்ந்து வருகின்றன. எனவே, உணவுப் பொருட்களுக்கு விதிக்கப்பட்ட ஜி.எஸ்.டி. வரியை ஒன்றிய அரசு உடனடியாக திரும்பப் பெற வேண்டும் என்று வலியுறுத்து கிறேன். பால் மற்றும் பால் பொருட்கள் மீதான வரியையும் திரும்பப் பெற வேண்டும். அத்தியாவசியப் பொருட்களின் விலைகளையும், பொதுமக்களின் அன்றாடத் தேவைகளையும் கண்காணித்து கட்டுப்படுத்த ஒன்றிய அரசு முழு முயற்சி எடுக்க வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.