தமிழ் மக்களை போன்று நான் தமிழ் பேச விரும்புகிறேன்: ஆளுநர் ரவி

தமிழ் மிகவும் பழமையான மொழி என்பதோடு அழகான மொழியாக உள்ளதால் தமிழ் மக்களை போன்று நான் தமிழ் பேச விரும்புகிறேன் என கூறிய ஆளுநர் ஆர்என் ரவி, சனாதன தர்மத்தை அழிக்க முடியாது என அவர் கூறினார்.

ஈரோடு மாவட்டம் அறச்சலூர் அருகே உள்ள ஓடாநிலையில் தீரன் சின்னமலை ஆடிப்பெருக்கு விழா கொண்டாடப்பட்டது. இதில் தமிழக ஆளுநர் ஆர்என் ரவி பங்கேற்றார். பின்னர் தீரன்சின்னமலை மணிமண்டப வளாகத்தில் உள்ள தீரன் சின்னமலை முழுஉருவச்சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். இந்த நிகழ்ச்சியில் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை, ஆதினங்கள் உடனிருந்தனர். பின்னர் தீரன் சின்னமலை கூட்டமைப்பு சார்பில் நடந்த தீரன்சின்மலை 217-வது நினைவேந்தல் நிகழ்வில் ஆளுநர் ஆர்என் ரவி பங்கேற்றார். இதில் அவர் பேசியதாவது:-

இந்தியாவின் சிறந்த சுதந்திர போராட்ட வீரர் தீரன் சின்னமலையின் நினைவு நாளில் பங்கேற்பதில் பெருமையாக உள்ளது. இந்திய சுதந்திரத்துக்காக தீரன் சின்னமலை தனது உயிரை தியாகம் செய்தவர். நமது நாட்டின் விடுதலைக்காக தனது வாழ்வை இழந்தவர்களையும், ரத்தம் சிந்தியவர்களையும் மறக்க கூடாது. நாட்டுக்காக தியாகம் செய்தவர்களை நாம் ஒருபோதும் மறக்க கூடாது. சிறந்த பாரதத்தை உருவாக்குவதே சுதந்திர போராட்ட தியாகிகளுக்கு நாம் செய்யும் நன்றி கடனாகும்.

தீரன் சின்னமலை சிறந்த தலைவர். போர் வீரர் மட்டுமல்லாது தொலைநோக்கு பார்வை கொண்டவர்.
இந்த மாபெரும் தலைவரின் பன்முகத்தன்மையை இன்னும் நாம் முழுமையாகப் பாராட்டவில்லை என நான் நினைக்கிறேன். ராணுவ பலமும், பொருளாதார வளம் மட்டும் நமக்கு போதும் என்று நினைக்காமல் அறிவுசார் வளர்ச்சியும் தேவை என தீரன் சின்னமலை நினைத்தார். அதனால் தான் இந்த மண்ணின் அறிஞர்களை, கவிஞர்களை அவர் ஊக்குவித்தார். தர்மத்தின் பாதுகாவலராகவும் புரவலராகவும் விளங்கினார்.

சேர, சோழ, பண்டியர்களால் நாட்டின் பெருமைக்குரிய பாரம்பரியக் கோவில்கள் கட்டப்பட்டன. இந்த கோவில்களை கிரேக்கம் உள்ளிட்ட உலகின் எந்த கட்டிகலையுடனும் ஒப்பிட முடியாது. அப்போது இங்கு தோன்றிய இந்து தர்மம் நாடு முழுவதும் வெளிச்சமாய் பரவியது. தீரன் சின்னமலையும் இந்த தர்மத்தை பின்பற்றினார். குலதெய்வ குல வழிப்பாட்டை தொடர்ந்தார். இந்நாட்டின் ஆன்மா, இந்த தர்மத்தில் தான் வாழ்கிறது. உலகின் பழமையான மொழி தமிழ். பழமையான இலக்கண நூல் தொல்காப்பியம். துரதிஷ்டவசமாக வரலாற்றில் திரிபுகள் ஏற்படுத்தப்பட்டுள்ளது. இது மாறும்.

சிலப்பதிகாரத்தில் பாரதம் குறித்தும் இந்து தர்மம் குறித்தும் குறிப்பிடப்பட்டுள்ளது. கங்கையில் இருந்து மதுரை வரை அதில் குறிப்பிடப்பட்டுள்ளது. சனாதான தர்மத்தை போலவே இத்தகைய விலைமதிப்பற்ற நூல்களில் பதிவு செய்யப்பட்டுள்ள கருத்துக்களை அழிக்க முடியாது. நாம் யார், எப்படி வளர்ந்தோம் என்பதை சத்தமாகவும், தெளிவாகவும் இந்த நூல்கள் வெளிப்படுத்தியுள்ளன. உலகளாவிய சகோதரத்துவத்தைத்தான் சனாதனம், கலாச்சாரம், தர்மம் என்று சொல்கிறோம். ஒரே கடவுள் தன்னை வெவ்வேறு வழிகளில் வெளிப்படுத்திக் கொள்கிறார். நாம் அனைவரும் சகோதர, சகோதரிகள்.

தமிழ் மிகவும் பழமையான மொழி. அதேவேளையில் சக்தி வாய்ந்த மிகவும் அழகான மொழியாக தமிழ் உள்ளது. இதனால் தமிழ் மக்களைப்போன்று நானும் தமிழ் பேச வேண்டும் என்பது எனது விருப்பமாக உள்ளது. விரைவில் நானும் உங்களைப்போன்று சரளமாக தமிழில் பேசுவேன் என்று உறுதியாக நம்புகிறேன்.

இந்தியா உலகின் தலைமை பொறுப்பை நிச்சயம் ஏற்கும். 75 ஆண்டு சுதந்திர தினவிழாவில் நமது சுதந்திரப்போராட்ட வீரர்களையும், சிறந்த தலைவர்களையும் போற்ற வேண்டும். அடுத்த 25 ஆண்டுகளில் 2047-ல் உலகின் தலைவராக இந்தியா மாறி இருக்கும். உலகில் தீவிரவாதம், போர், பொருளாதார ஏற்றதாழ்வு அதிகரித்து, மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்த நேரத்தில், போரை ஆதரிக்காத, போரை நடத்தாத இந்தியாவை உலகம் தலைமை தாங்க எதிர்பார்க்கிறது. 75 வது சுதந்திரதினத்தைக் கொண்டாடும் நாம், தீரன் சின்னமலையின் கனவுப்படி, பொருளாதார வளம், ராணுவ பலம், அறிவுசார் வளர்ச்சி பெற்ற, தர்மத்தை காக்கும் நாடாக இந்தியாவை உருவாக்க வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.