இந்தியாவிடம் சீனா வாலாட்டினால் அமெரிக்கா பாணியில் தைவானுக்கு ஆதரவாகவும் அந்நாட்டுடன் நெருக்கமான உறவுகளையும் முன்னெடுக்க வேண்டும் என்று மத்திய அரசுக்கு மூத்த காங்கிரஸ் தலைவர் சசி தரூர் ஆலோசனை கூறியுள்ளார்.
1970களில் தைவான், ஒருங்கிணைந்த சீனாவாக அங்கீகரிக்கப்பட்டது. இன்றைய சீனா அப்போது அங்கீகரிக்கப்படாத கம்யூனிச நாடாக இருந்தது. காலம் மாற இன்றைய சீனாவே ஒருங்கிணைந்த சீனாவாகவும் ஐநா அமைப்பில் பிரதான பங்களிப்பையும் வழங்கி வருகிறது. தைவான் நாட்டைப் பொறுத்தவரை சீனா தமது நாட்டின் ஒருங்கிணைந்த பகுதி என்கிறது; உலக நாடுகளும் தைவான் விவகாரத்தில் இருவேறு நிலைப்பாடுகளுடன் உள்ளன.
இந்நிலையில் உக்ரைனை ரஷ்யா ஆக்கிரமிக்க யுத்தம் நடத்துவது போல தைவானை சீனா ஆக்கிரமிக்கும் போர் நடத்தக் கூடும் என்கிற சூழ்நிலை உள்ளது. தைவான் பிராந்தியத்தில் போர் பதற்றம் தொடர்ந்து நீடித்து கொண்டிருக்கிறது. தற்போது தைவானுக்கு ஆதரவாக அமெரிக்காவின் பிரதிநிதி நான்சி பெலோசி அந்நாட்டுக்கு பயணம் மேற்கொண்டார். இது சர்வதேச சமூகத்தில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. தைவான் ஆதரவு அமெரிக்கா சார்பு நாடுகள், சீனா ஆதரவு அமெரிக்கா எதிர்ப்பு நாடுகள் என அணிவகுத்தும் நிற்கின்றன. அமெரிக்காவின் போக்குக்கு சீனா கடும் எச்சரிக்கை விடுத்துள்ளது. தைவான் மீது சில பொருளாதார தடைகளையும் சீனா விதித்துள்ளது.
இந்நிலையில் தைவான், சீனா விவகாரத்தை முன்வைத்து மத்திய அரசுக்கு மூத்த காங்கிரஸ் தலைவர் சசி தரூர் கூறியதாவது:-
சீனா நம்மிடம் வாலாட்டும் போக்கை தொடர்ந்தால் தைவானுடன் நாம் நெருக்கமான உறவை முன்னெடுக்க வேண்டும். தைவான் விவகாரத்தை துருப்புச் சீட்டாக உரிய நேரத்தில் மத்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் பயன்படுத்த வேண்டும். பெரும்பாலான உலக நாடுகள் தற்போதைய ஒருங்கிணைந்த சீனாவை ஏற்றுக் கொள்கின்றன. அதேநேரத்தில் தைவானுடனான பொருளாதார உறவுகளையும் வலுப்படுத்துகின்றன. தைவானுடன் வர்த்தக குழுவை நாம் கொண்டிருந்தாலும் தூதரக உறவாக, அதனை கருதவும் முடியாது. உக்ரைனோ, தைவானோ இந்தியா இந்த விவகாரங்களில் இருந்து விலகி நிற்கவும் முடியாது. இவ்வாறு சசி தரூர் கூறினார்.