டீ விற்றார் என்று சொல்வதை நம்புவோர், நாட்டை விற்கிறார் என்பதை நம்புவதில்லை: சீமான்!

டீ விற்றார் என்று சொல்வதை நம்பும் மக்கள், மோடி நாட்டை விற்கிறார் என்று சொல்வதை நம்புவதில்லை என பிரதமர் நரேந்திர மோடியை நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கடுமையாக விமர்சித்துள்ளார்.

சுதந்திர போராட்ட வீரர் தீரன் சின்னமலையின் 218வது நினைவு தினத்தையொட்டி சென்னையில் உள்ள தீரன் சின்னமலை சிலைக்கு நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் மலர்தூவி மரியாதை செலுத்தினார். பின்னர் செய்தியாளர்களிடம் சீமான் கூறியதாவது:-

எல்லா பகுதிகளிலும் படையை உருவாக்கி தான் ஆங்கிலேயர்களை எதிர்த்தார்கள். ஆனால் மக்கள் படையாக மாற்றி ஆங்கிலேயர்களை எதிர்த்தவர் தீரன் சின்னமலை. ஜெயக்குமார் மீது எனக்கு மிகுந்த மரியாதை இருக்கிறது. அதை கெடுத்துக் கொள்ளக் கூடாது. பாஜகவையோ, தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினையோ பேசினால், உடனே வீட்டிற்கு சோதனை செய்ய வருவார்கள் என்று பயம். ஆனால், என்னிடம் இழப்பதற்கு எதுவும் கிடையாது. நான் அவரை அண்ணன் என மதிக்கிறேன். அதனால் ஜெயக்குமார் என்னை அப்படி பேசுகிறார். அதிமுக, பாஜக, திமுக, காங்கிரஸ் எந்த கட்சிக்காவது தனித்துப் போட்டியிட தைரியம் உள்ளதா.

திராவிடம் என்றால் என்ன என்று விளக்கமளிக்க முடியாத ஒரு கொள்கையை பின்பற்றி வருகிறார்கள். வரலாற்றில் ஆண்ட அனைத்து பேரரசுகளும் ஒரு நாளில் வீழ்த்துள்ளன. இன்னும் எத்தனை நாட்களுக்கு ஆட்சி செய்வீர்கள் என்பதை பார்க்கிறேன்.

பாஜக 5ஜி அலைக்கற்றையில் மட்டுமல்ல. கடந்த 8 ஆண்டுகளாக தொடர்ந்து முறைகேட்டில் தான் ஈடுபட்டு வருகிறது. நாட்டை 4 பேர் ஆள்கிறார்கள். அதில் இருவர் விற்கிறார்கள், இருவர் வாங்குகிறார்கள். அவர்கள் நான்கு பேருமே குஜராத்திகள் தான். மோடி டீ விற்றார் என்று சொல்வதை நம்பும் மக்கள், மோடி நாட்டை விற்கிறார் என்று சொல்வதை நம்புவதில்லை.

பாஜக சார்பாக பேசும் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், பெட்ரோல், டீசலுக்கான விலையை இருமுறை குறைந்துள்ளோம் என்று கூறுகிறார்கள். உயர்த்தியவர்கள் தானே குறைக்க வேண்டும். 5 மாநில தேர்தல் வரவில்லை என்றால் பெட்ரோல் விலையை குறைத்து இருக்க மாட்டார்கள். இவ்வாறு அவர் கூறினார்.