அமெரிக்காவில் மர்ம நபர் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 4 பேர் உயிரிழந்து உள்ளனர்.
அமெரிக்காவில், துப்பாக்கி கலாச்சாரம் நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே தான் வருகிறது. துப்பாக்கி வைத்திருப்பதற்கான கெடுபிடிகள் கடுமையாக்கப்பட்ட போதிலும், துப்பாக்கிச் சூடு சம்பவங்கள் குறைந்தபாடில்லை. இது அந்நாட்டு மக்கள் மத்தியில் கடும் அதிர்வலைகளை ஏற்படுத்தி வருகிறது. இந்நிலையில், அமெரிக்காவின் ஓஹியோ நகரில், மர்ம நபர் ஒருவர் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 4 பேர் உயிரிழந்தனர். மேலும், பலர் காயம் அடைந்துள்ளனர். அவர்கள் அனைவரும் அருகில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு உள்ளனர்.
துப்பாக்கிச் சூட்டில் ஈடுபட்ட நபராக கருதப்படும் ஸ்டீபன் மார்லோவை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர். அமெரிக்க புலனாய்வு அமைப்பு (எப்.பி.ஐ) அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அந்த நபர் கண்மூடித் தனமாக பொது மக்களை சுட்டு விட்டு வெள்ளை நிற காரில் தப்பித்து விட்டதாக போலீசார் கூறினர்.
அமெரிக்காவின் டாய்டன் நகருக்கு அருகில் அமைந்துள்ள சிறிய நகரமான பட்லர் டவுன்ஷிப்பில் சுமார் 8,000 பேர் வசித்து வருகின்றனர். அப்பகுதியில் மர்ம நபர் துப்பாக்கிச் சூடு நடத்தி விட்டு தப்பிச் சென்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. அமெரிக்காவில் ஆண்டுக்கு 40,000 மரணங்கள் துப்பாக்கிச் சூடு போன்ற சம்பவங்களால் நிகழ்வதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன.