இந்திய கடல் எல்லைக்குள், பாகிஸ்தான் போர் கப்பல் ஒன்று திடீரென நுழைந்துவிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. இதையடுத்து, அந்த கப்பல் உடனடியாக விரட்டியடிக்கப்பட்டது.
பாகிஸ்தான் கடற்படையின் போர்க்கப்பல் ஆலம்கிர், நேற்று குஜராத் கடல் பகுதியில் உள்ள இரு நாடுகளுக்கும் இடையிலான கடல் எல்லை கோடு பகுதியை கடந்து இந்திய கடற்பகுதிக்குள் நுழைந்தது. உடனடியாக இதை அறிந்த இந்திய கடற்படையினர், இந்திய கடலோர காவல்படையின் டோர்னியர் விமான கேப்டனுக்கு தகவல் அளித்தனர். இதையடுத்து அந்த பகுதிக்கு விரைந்த இந்திய கண்காணிப்பு விமானம், பாகிஸ்தான் போர்க் கப்பலின் இருப்பிடம் குறித்து எச்சரிக்கை விடுத்ததுடன் அதன் பகுதிக்குத் திரும்பும்படி வலியுறுத்தியது. டோர்னியர், ஆலம்கிர் மீது வட்டமிட்டுக் கொண்டே இருந்ததாகவும், கடலோர காவல்படை அதிகாரிகள் தெரிவித்தனர்.
பாகிஸ்தான் போர் கப்பல் அத்துமீறியதன் நோக்கத்தை அறிய வானொலி மூலம் இந்திய தரப்பினர் பாகிஸ்தான் கப்பல் கேப்டனுடன் தொடர்பு கொண்ட நிலையில் அவர் அதற்கு பதில் அளிக்கவில்லை. இதையடுத்து டோர்னியர் விமானம் மூன்று முறை பாகிஸ்தான் போர்க்கப்பலுக்கு முன்னால் பறந்து எச்சரித்தது. இதையடுத்து பின்வாங்கிய ஆலம்கீர், பாகிஸ்தான் பகுதிக்கு திரும்பியதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
அதேபோல, இதே கட்ச் மாவட்டம் ஹாராமி நாலாவில் உள்ள இந்தியா – பாகிஸ்தான் கடல் எல்லை பகுதியில் கைவிடப்பட்ட பாகிஸ்தான் நாட்டு படகிலிருந்து இந்திய எல்லை பாதுகாப்பு படையினர் 12 துப்பாக்கிகளை சில நாட்களுக்கு முன்பு கண்டுபிடித்துள்ளதாக தகவல் வெளியாகியிருந்தது. வழக்கமாக மீனவர்கள், துப்பாக்கிகள் அத்துமீறி நுழைந்ததாக கூறப்பட்ட நிலையில், போர்விமானம் நுழைந்துவிட்டதால், பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
