பாகிஸ்தான் போர்க்கப்பல் இலங்கை துறைமுகத்தில் நான்கு நாட்கள் நின்று செல்ல அனுமதி!

சீனாவில் இருந்து பாகிஸ்தான் செல்லும் பி.என்.எஸ். தைமூர் ஏவுகணை தாங்கி போர்க்கப்பல் இலங்கை துறைமுகத்தில் நான்கு நாட்கள் நின்று செல்ல இலங்கை அரசு அனுமதி அளித்துள்ளது.

பாகிஸ்தான் கடற்படைக்காக பி.என்.எஸ். தைமூர் என்ற ஏவுகணை தாங்கி போர்க்கப்பலை சீனா உருவாக்கி உள்ளது. சீனாவின் ஷாங்காய் நகரில் உள்ள ஹுடாங் – ஸாங்குவா கப்பல் கட்டும் தளத்தில் உருவாக்கப்பட்ட இந்தக் கப்பல் சீனாவில் இருந்து புறப்பட்டு பாகிஸ்தான் செல்கிறது. வழியில் கம்போடியா மற்றும் மலேஷியா கடற்படையுடன் பயிற்சியில் ஈடுபட்டது. மலேஷியாவில் இருந்து புறப்படும் போர்க் கப்பலை அண்டை நாடான வங்கதேசத்தில் ஆக. 7 – 10 வரை நிறுத்தி வைக்க திட்டமிடப்பட்டது. வங்கதேசத்துக்கு மிக நெருங்கிய நட்பு நாடான இந்தியா இதற்கு கண்டனம் தெரிவிக்கும் என்பதால் அந்நாட்டு துறைமுகத்தில் கப்பலை நிறுத்திச் செல்ல பிரதமர் ஷேக் ஹசீனா அனுமதி மறுத்தார். இந்நிலையில் மலேஷியாவில் இருந்து புறப்படும் சீன கப்பல் இலங்கையின் கொழும்பு துறைமுகத்தில் ஆக. 12 – 15 வரை நின்று செல்ல அந்நாட்டு அரசு அனுமதி அளித்துள்ளது.

முன்னதாக சீனாவின் ‘யுவான் வாங் 5’ என்ற உளவு கப்பலை இலங்கையின் அம்பன் தோட்டா துறைமுகத்தில் ஆக., 11 – 17 வரை நிறுத்தி வைக்க சீனா திட்டமிட்டது. விண்வெளி மற்றும் செயற்கைக்கோளை கண்காணிக்கும் இந்த உளவு கப்பலை இலங்கையில் நிறுத்துவது, இந்தியாவின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தலை ஏற்படுத்தும் என்பதால், மத்திய அரசு ஆட்சேபம் தெரிவித்தது. இதை ஏற்று, கப்பலை இலங்கை துறைமுகத்தில் நிறுத்த அந்நாட்டு அரசு மறுத்து விட்டது. இதனால் ஆத்திரமடைந்த சீன வெளியுறவுத்துறை செய்தி தொடர்பாளர் வாங் வென்பின் கூறியதாவது:-

பாதுகாப்பு அச்சுறுத்தலை காரணம் காட்டி இலங்கைக்கு அழுத்தம் கொடுப்பது அர்த்தமற்றது. தங்கள் நாட்டின் நலன் கருதி, வேறு எந்த நாட்டுடனும் நல்லுறவு பேணுவது இலங்கையின் உரிமை. சீனாவின் அறிவியல் ஆய்வுகளை ஆக்கப்பூர்வமாக பார்க்க வேண்டும். சீனா – இலங்கை உறவில் இடையூறு விளைவிப்பதை, சம்பந்தப்பட்ட நாடு நிறுத்திக் கொள்ள வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.