முன்னாள் அதிபர் டிரம்பின் எஸ்டேட்டில் எப்.பி.ஐ. அதிகாரிகள் திடீர் சோதனை!

அமெரிக்க முன்னாள் அதிபர் டொனால்டு டிரம்பின் எஸ்டேட்டில் எப்.பி.ஐ. அதிகாரிகள் திடீர் சோதனை நடத்தி உள்ளனர்.

அமெரிக்காவின் முன்னாள் அதிபர் டொனால்டு டிரம்ப். இவரது மர்-எ-லாகோ என்ற எஸ்டேட், புளோரிடா மாகாணத்தில் அமைந்துள்ளது. இந்நிலையில், இந்த எஸ்டேட்டில் எப்.பி.ஐ. அதிகாரிகள் முன்னறிவிப்பு எதுவுமின்றி வந்து அதிரடி சோதனை நடத்தி உள்ளனர். இதனை டிரம்ப் தனது சமூக ஊடகத்தில் தெரிவித்து உள்ளார். இதுபற்றிய அவரது அறிக்கையில், புளோரிடாவில் உள்ள தனது மர்-எ-லாகோ எஸ்டேட்டில் திடீரென வந்த எப்.பி.ஐ. அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர். எனது வீட்டில் முன்னறிவிப்பின்றி சோதனை நடத்தி வரும் தொடர்புடைய அரசு அமைப்புகளுடன் இணைந்து, அவர்களுக்கு ஒத்துழைப்பு அளித்து வருகிறேன். இந்த சோதனை அவசியமற்றது. முறையற்றதும் கூட என தெரிவித்து உள்ளார். இந்த சோதனையின் ஒரு பகுதியாக எப்.பி.ஐ. ஏஜெண்டுகள் கட்டாயப்படுத்தி பணப்பெட்டி ஒன்றையும் திறக்க செய்தனர் என அவர் அதில் தெரிவித்து உள்ளார்.

சமீப காலங்களாக, மற்றொரு முறை அதிபராவது பற்றி டிரம்ப் சில யூகங்களை வெளியிட்டு வருகிறார். அமெரிக்க நீதி துறையோ, டிரம்பின் அதிபர் பதவி காலம் நிறைவடைந்த பின்னர், அவர் சில முக்கிய ஆவணங்களை இந்த எஸ்டேட்டுக்கு எடுத்து சென்று விட்டார் என்ற குற்றச்சாட்டுகளின் பேரில் விசாரணை நடத்தி வருகிறது என தெரிவித்து உள்ளது. வெள்ளை மாளிகையில் இருந்து புளோரிடாவில் உள்ள தனது ஆடம்பர இல்லத்திற்கு சில ஆவணங்கள் அடங்கிய பெட்டிகளை தன்னுடன் டிரம்ப் கொண்டு சென்றவற்றை பற்றி இந்த சோதனை நடைபெற்றிருக்க கூடும் என கூறப்படுகிறது. இதுதவிர, அமெரிக்காவின் கேப்பிட்டல் கட்டிடத்தில் நடந்த முற்றுகை போராட்டம் பற்றிய விசாரணையும் தனியாக நடைபெறும் என கூறப்படுகிறது. ஆனால், இதுபற்றிய தகவல்கள் எதனையும் எப்.பி.ஐ. அமைப்பு வெளியிடவில்லை.

இந்நிலையில் 2024 ஆம் ஆண்டு அதிபர் தேர்தலில் நான் போட்டியிடுவதை விரும்பாத ஜனநாயக கட்சியின் மறைமுக தாக்குதல் என முன்னாள் அதிபர் டிரம்ப் குற்றம்சாட்டி உள்ளார். இது குறித்து முன்னாள் அதிபர் டிரம்ப் கூறியதாவது:-

புளோரிடாவில் பாம் பீச்சில் உள்ள எனது அழகான இல்லமான மார்-ஏ-லாகோ தற்போது எப்.பி.ஐ. அதிகாரிகளால் முற்றுகையிடப்பட்டு, சோதனையிடப்பட்டு, ஆக்கிரமிக்கப்பட்டுள்ளதால், இது நமது தேசத்திற்கு இருண்ட காலமாகும், ஆயுதத்தை கொண்டு அமெரிக்க நீதி துறை தவறாக பயன்படுத்தப்படுகிறது. மேலும் 2024 ஆம் ஆண்டு நான் அதிபர் தேர்தலில் போட்டியிடுவதை விரும்பாத சில தீவிர இடது ஜனநாயகக் கட்சியினரின் மறைமுக தாக்குதல். இவ்வாறு அவர் குற்றம்சாட்டி உள்ளார்.